நடிகர் ரஜினியின் உடல்நிலைக் குறித்த விளக்கத்தையடுத்து ’தயவு செய்து உங்களுக்கு சிறந்ததையே செய்யுங்கள். உங்கள் மீதான எங்கள் அன்பு என்றும் மாறாது’ என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
“என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரிவிப்பேன்" என்று தெரிவித்திருந்தார், நடிகர் ரஜினி.
அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறிவரும் நிலையில், நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில்,
“அன்புள்ள ரஜினிகாந்த் சார் உங்கள் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் விட வேறு எதுவும் முக்கியமில்லை. நீங்கள் எங்கள் விலைமதிப்பற்ற ரத்தினம். நீங்கள் எங்கள் புதையல். தயவு செய்து உங்களுக்கு சிறந்ததையே செய்யுங்கள். உங்கள் மீதான எங்கள் அன்பு என்றும் மாறாது. உங்கள் வாழ்க்கையை எப்போதும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வோம்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.