சினிமா

ரஜினிக்கு சென்னையில் சிறப்பு பூஜை செய்த ஜப்பான் ரசிகை

webteam

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஜப்பானை சேர்ந்த ரசிகை ஒருவர் சென்னையில் சிறப்பு பூஜை செய்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தி 68 வது பிறந்த நாள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அரசு பள்ளிகளுக்கு உதவுதல், ஏழை பெண்களுக்கு சுய உதவி திட்டங்களுக்கு உதவுதல் என பல்வேறு நல திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

இதனிடையே பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, கஜா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டிய தருணம் இது எனவும் பணம் இருப்பவர்கள் அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் அரசால் மட்டுமே முழுமையாக நிவாரணம் அளித்து நிலைமையை சரிசெய்ய முடியாது என குறிப்பிட்டார்.

ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு அவரின் ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள பேட்ட படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. அதில் அண்ணாமலை படத்தில் ரஜினி பெயர் கார்டில் வரும் தீம் மியூசிக், படையப்பா படத்தில் கண்ணாடியை ஸ்டைலாக சுழற்றும் காட்சி என பல சுவாரஸ்யங்கள் இடம் பெற்றுள்ளன.

ரஜினிக்கு தமிழ்நாட்டில் ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்றால் அவரை கடவுளாக நினைத்து கொண்டாடும் அளவிற்கு ஜப்பானிலும் ரசிகர் பட்டாளம் அதிகம்.

இந்நிலையில் ஜப்பானில் இருந்து மகி என்ற ரசிகை ரஜினிக்காக சிறப்பு பூஜை செய்ய சென்னை வந்துள்ளார். அவர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோயிலில் ரஜினிக்காக சிறப்பு பூஜை செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”ஜப்பானில் உள்ள டோக்கியோ, ஒசாகா ஆகிய பகுதிகளில் ரஜினிக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிகர் ரஜினியின் பிறந்தநாளை கொண்டாட சென்னைக்கு வந்துள்ளோம். இங்கு ஒருவாரம் தங்குகிறோம். கோயில்களில் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டோம். இதற்கு ஏற்பாடு செய்த ரஜினி ரசிகர்களுக்கு நன்றி” என தெரிவித்தார்.