சினிமா

புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன குட்டிக் கதை

புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன குட்டிக் கதை

webteam

சென்னை கோடம்பாக்கத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினி, ஆன்மீகத்தின் முக்கியத்துவம் குறித்த ராஜா-மந்திரி கதை ஒன்றைக் கூறினார்.

தெய்வீகக் காதல் என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசிய ரஜினி, நான் ஒரு சினிமா நட்சத்திரம் என்பதை விட ஆன்மீகவாதி என்பதில் பெருமிதம் கொள்கிறேன். பணம், புகழ், ஆன்மீகம் ஆகியவற்றில் எது வேண்டும் என்று கேட்டால் ஆன்மீகத்தையே தேர்வு செய்வேன். நான் ஆன்மீக பவரையே விரும்புகிறேன் பேசினார்.

இதைத் தொடர்ந்து ரஜினி கூறிய ராஜா-மந்திரி கதை:

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம். நிர்வாகத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்த மந்திரிக்கு சகலவசதிகளையும் ராஜா செய்து கொடுத்தார். ராஜாவுக்கு இணையான உரிமைகளும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தன. ஒருநாள் ராஜாவை சந்தித்த மந்திரி, தான் ஆன்மீகத்தில் ஈடுபடப்போவதாகவும், அதனால் பதவியைத் துறந்து இமயமலை நோக்கி துறவறம் செல்ல இருப்பதாகவும் கூறினார். அவரின் கோரிக்கையைக் கேட்டு வருத்தமுற்ற ராஜா, முழுமனதில்லாவிட்டாலும் மந்திரியின் கோரிக்கையை ஏற்று அவரை அனுப்பி வைத்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் சந்நியாசியாக அந்த நாட்டுக்குத் திரும்பிய மந்திரி, ஊருக்கு வெளியில் சிறிய குடிசை ஒன்றை அமைத்துத் தங்கியிருந்தார். அவரைப் பார்ப்பதற்காக நேரில் வருகை தந்த ராஜா, ஏன் இத்தனை வசதிகளையும் விட்டுவிட்டு துறவறம் மேற்கொண்டீர்கள்?. இதனால் நீங்கள் சாதித்தது என்ன? என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த சந்நியாசியான மந்திரி, மன்னா நான் மந்திரியாக இருந்தபோது நீங்கள் அமர்ந்துகொண்டிருப்பீர்கள். தற்போது நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள். நான் அமர்ந்துகொண்டிருக்கிறேன் இதைவிட வேறென்ன சாதனை செய்துவிட முடியும் என்று கேட்டார். அதுவே ஆன்மீகத்தின் சக்தி என்று ரஜினி கதையைக் கூறி முடித்தார்.