சினிமா

''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்

''மதிய உணவு நேரத்தில் நடனமாடிக் காட்டினேன்'' - ரஜினி குறித்து நெகிழும் லாரன்ஸ்

webteam

இந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறைக்குள் நுழைந்து 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழலில் அவரது ரசிகர்கள் அதனை சமூக வலைத்தளங்களில் கொண்டாடினர். நடிகர்கள், இயக்குனர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும், நடிகருமான லாரன்ஸ் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள அவர், சூப்பர் சுப்பராயன் மாஸ்டரிடம் நான் கார் கிளீனராக இருந்தேன். அப்போது படப்பிடிப்பு தளத்தில் ரஜினி சாரை அடிக்கடி பார்ப்பேன். ஒருமுறை மதியம் மாஸ்டரும், ரஜினி சாரும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். அப்போது ரஜினி சாரிடம், இந்தப்பையன் நன்றாக நடனம் ஆடுவான். பார்க்கிறீர்களா என என்னைப்பற்றி கூறியுள்ளார். ரஜினியும் சரி எனக் கூற நான் அவர் முன்னால் ஆடிக் காட்டினேன். அதுதான் என் வாழ்க்கையை மாற்றிய தருணம்.

ரஜினி சார் என்னிடம் நாளை வந்து சந்திக்குமாறு கூறினார். நான் அடுத்தநாள் அவரைப் பார்க்கச் சென்றேன். அவர் ஒரு கடிதம் கொடுத்தார். அதில் இனி சாப்பாடு எடுக்க வேண்டாம். யூனியன் சென்று கார்டு எடு என என்னிடம் தெரிவித்தார். பிரபுதேவா சாரிடமும் என்னைப் பற்றி அவர் கூறியுள்ளார். அப்படித் தான் என்னுடைய முதல் பாடல் கிடைத்தது. அவர் மட்டும் அன்று என்னை யூனியன் பக்கம் அனுப்பவில்லை என்றால் இன்று நான் இங்கிருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இன்று நான் ரஜினி சார் நடித்த சந்திரமுகியின் அடுத்த பாகத்தில் நடிக்கிறேன் என்பதே வரம் தான். வாசு சார் என்னிடம் சந்திரமுகி2 குறித்து கேட்டபோது நான் ரஜினி சாரின் அனுமதியைக் கேட்டேன். அவர் சந்தோஷமாக சரி என்றார். இவையெல்லாம் ராகவேந்திரா-ரஜினி சாரின் மேஜிக் தான் எனத் தெரிவித்துள்ளார்