பாகுபலி-2 படத்துக்குப் பின்னர் இயக்குனர் ராஜமௌலி சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாகுபலி படம் மூலம் உலகின் பார்வையை இந்திய சினிமா பக்கம் திருப்பியவர் இயக்குனர் ராஜமௌலி. அந்த படத்தின் வெற்றி ராஜமௌலி மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ள நிலையில், பாகுபலி-2 படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்தநிலையில், பாகுபலி-2 படத்துக்குப் பின்னர் ரஜினியுடன், ராஜமௌலி கைகோர்க்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட இருக்கும் இந்த படத்துக்கான திரைக்கதையை ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுத இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த படத்தில் அமீர்கான், மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் கோடம்பாக்கத்தில் உலா வருகிறது. பாகுபலி-2 படம் வரும் ஏப்ரலில் திரைக்கு வருகிறது. அதன்பின்னர் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று தெரிகிறது.