சினிமா

வெளிநாட்டு விற்பனை உரிமையில் ராஜமவுலி படம் சாதனை!

webteam

ராஜமவுலி இயக்கி வரும் ’ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெளிநாட்டு விற்பனை உரிமை, அதிக விலைக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

'பாகுபலி' மூலம் புகழின் உச்சத்துக்குச் சென்ற இயக்குனர் ராஜமவுலி, அடுத்து இயக்கும் படம், ’ஆர்ஆர்ஆர்’.  தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா ஹீரோக்களாக நடிக்கின்றனர். இந்தப் படம், ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. இதன் கதை, சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராம ராஜு, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டுள்ளது. ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதையை எழுதியுள்ளார்.

தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில், பிரபல இந்தி ஹீரோ அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றனர். மற்றும் அலியா பட் உட்பட பலர் நடிக்கின்றனர். படம் அடுத்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி, வெளியாக இருக்கிறது. இதன் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்தக்கப்பட்ட படப்பிடிப்புக்கான வேலைகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே பட ரிலீஸுக்கு முன்பே, இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை அதிக விலைக்கு விற்று, சாதனை படைத்துள்ளது. வளைகுடா நாடுகளில் இந்திய படங்களை விநியோகிக்கும் துபாயை சேர்ந்த பர்ஸ் பிலிம் (Phars Film ) என்ற நிறுவனம் இந்த உரிமையை பெற்றுள்ளது. இந்தியா, சீனா தவிர உலகம் முழுவதும் விநியோகிக்க ரூ.65 கோடிக்கு விற்பனை உரிமையை இந்நிறுவனம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இது, பாகுபலி 2 படத்தை விட அதிகம் என்றும் வேறு எந்த தென்னிந்திய படத்தின் வெளிநாட்டு உரிமையும் இவ்வளவு தொகைக்கு விற்கப்பட வில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவலை படத்தின் தயாரிப்புத் தரப்போ, துபாயை சேர்ந்த பர்ஸ் பிலிம் நிறுவனமோ உறுதிப் படுத்தவில்லை.