ராஜமௌலி, நிதேஷ் திவாரியின் 'ராமாயணா' படத்தை பாராட்டி, ராமராக ரன்பீர் கபூரின் கம்பீரம், ராவணனாக யஷின் மிரட்டல், சீதையாக சாய் பல்லவியின் நேர்த்தி ஆகியவை அற்புதமான அனுபவமாக இருந்ததாக கூறினார். 4000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் தீபாவளி வெளியீட்டில் பாசிட்டிவான கருத்துகளை பெற்றுள்ளது.
தங்கல் திரைப்பட இயக்குநரான நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்திருக்கும் படம் ‘ராமாயணா’. ஏ ஆர் ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹேன்ஸ் ஸிம்மரின் இசையில் உருவாகியுள்ள இப்படம் 2026 தீபாவளியை முன்னிட்டு இன்று நவம்பர் 5ஆம் தேதி 5 மொழிகளில் திரையரங்கில் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் பிரபலமான ராமாயணா தொலைக்காட்சி தொடரில் ஸ்ரீ ராமராக நடித்திருந்த அருண் கோவில், மன்னர் தசரதராகவும், அனுமாராக சன்னி தியோலும், ஷோபனா கைகேயியாகவும், அஜிங்க்யா தேவ் மகரிஷி விஸ்வாமித்திரராகவும், குனால் கபூர் தேவேந்திரனாகவும், ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பணகையாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் நடித்துள்ளனர்.
சுமார் 4000 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்தநிலையில், இன்று திரையரங்கில் வெளியாகி பாசிட்டிவான கருத்துகளை பெற்றுவருகிறது.
இந்தசூழலில் நிதேஷ் திவாரியின் ராமாயணாவை பாராட்டியிருக்கும் இயக்குநர் ராஜமௌலி, “ராமாயணம்… இந்தப் படத்தின் பிரம்மாண்டமான அளவும், பெரிய திரையில் விரியும் காட்சிகளும் பார்ப்பதற்கு மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. ராமராக ரன்பீர், அமைதியாகவும் அதே சமயம் கம்பீரமாகவும் இருக்கிறார். ராவணனாக யாஷ் மிரட்டலான தோற்றத்தை வெளிப்படுத்த, சீதையாக சாய் பல்லவி மிகுந்த நேர்த்தியுடன் நடித்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் பகுதி என அனைத்தும் மிகவும் பிடித்தது" என பாராட்டி பதிவிட்டுள்ளார்.