இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் ராணா டகுபதி நடித்து 2015ல் வெளியான படம் `பாகுபலி'. 2017ல் இதன் இரண்டாம் பாகம் வெளியானது. இரு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. பாகுபலி தி பிகினிங் படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, பாகுபலி அக்டோபர் 31ம் தேதி ரீ ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. இதில் சிறப்பு என்ன என்றால், பாகுபலியின் இரு பாகங்களையும் ஒரே பாகமாக இணைத்து Baahubali: The Epic என வெளியிட உள்ளனர்.
மகேஷ்பாபு நடிப்பில் தன் அடுத்த படத்தை இயக்கிவரும் ராஜமௌலி அதிலிருந்து ஒரு இடைவேளை எடுத்துக் கொண்டு Baahubali: The Epic இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதைப் பற்றி குறிப்பிட்ட தயாரிப்பாளர் ஷோபு "பாகுபலியை செதுக்க இறுதிக்கட்ட மெருகூட்டலை சேர்க்கிறார் ராஜமௌலி. Epic Cut என்ற லட்சியத்தை அடைவதற்கான எடிட்டிங் மிக சவாலான ஒன்றாக இருந்தது. மேலும் ஒரு புது படத்தின் வேலைகளில் ஈடுபடுவதை போல, படக்குழுவினர் அனைவரின் பங்களிப்பு இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இதே வேளையில் பாகுபலி சார்ந்த இன்னொரு விஷயமும் நடந்ததை, பாகுபலி ரீ ரிலீஸ் உடன் தொடர்புபடுத்தி வருகின்றனர். பாகுபலி படத்தின் இரு பாகங்களும் இந்தி மற்றும் ஆங்கில பதிப்பாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இருந்தன. ஆனால் தற்போது அந்த பாதிப்புகள் நெட்ஃபிளிக்ஸ்-ல் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எனவே பாகுபலி ரீ ரிலீஸ் ஆவதால் இந்த நீக்கம் நடைபெற்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் பாகுபலியின் தெலுங்கு மற்றும் தமிழ் பாதிப்புகள் ஹாட்ஸ்டார் தளத்தில் இன்னும் உள்ளது. ஒருவேளை ரிலீஸ் தேதி நெருங்கும் வேளையில் இதுவும் நீக்கப்படுமோ என்ற சந்தேகமும் உருவாகி இருக்கிறது. ஏனென்றால், Baahubali: The Epic படத்தை மிக பிரம்மாண்டமாக, ஐமாக்ஸ் உள்ளிட்ட வடிவிலும் வெளியிட உள்ளது படக்குழு. மீண்டும் இப்படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வைக்க திட்டமிட்டுள்ளனர்.