Rajamouli Varanasi
சினிமா

"IMAX திரைக்காகவே எடுக்கிறோம்.." 'வாரணாசி' பற்றி ராஜமௌலி | Varanasi | SS Rajamouli | Mahesh Babu

நாம் எடுக்கும் படங்கள் எல்லாம் அதிகம் சினிமா ஸ்கோப்பில் எடுக்கப்படுவதே. நாம் ஐமாக்ஸில் பார்க்கும் பல படங்கள், ஸ்கோப்பில் (2.39:1) எடுக்கப்பட்டு Imaxக்காக ப்ளோ அப் செய்யப்பட்டவை.

Johnson

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு, ப்ரித்விராஜ், ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகிவரும் படம் `வாரணாசி'. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா பிரம்மாண்டமாக ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 100 அடி திரை அமைக்கப்பட்டு, அதில் படத்தின் தலைப்பு வீடியோவை திரையிட்டனர்.

இந்நிகழ்வில் பேசிய ராஜமௌலி, இப்படத்தை ஐமாக்சில் எடுப்பதை பற்றி கூறினார். அதை விவரிக்கையில் "என் திரைப்படங்களுக்கு முன்பு, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி கதையை விவரிப்பது ஒரு வழக்கமாக மாறிவிட்டது. ஆனால் உண்மையில், எல்லா படத்துக்கும் நான் அதைச் செய்வதில்லை. ‘பாகுபலி’க்கு நான் அதை செய்யவில்லை. சில படங்களின் கதையை சொல்லமுடியும், சிலவற்றுக்கு முடியாது.

இந்தத் திரைப்படத்தை, வார்த்தைகள் மூலம் விவரிப்பது நியாயமாக இருக்காது. ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை சரியாக உருவாக்க வேண்டும். அதே சமயம் கதையையும் சொல்லக்கூடாது. என்ன செய்யலாம் என யோசித்த போது ஒரு முடிவுக்கு வந்தோம். படத்தின் பிரம்மாண்டத்தை, கதைக்களத்தை விவரிக்கும்படி ஒரு வீடியோ தயார் செய்யலாம். அதை மார்ச் மாதம் வெளியிட நினைத்தோம். ஜூன், ஜூலை என மாதங்கள் சென்று கொண்டே இருந்தது. ஆனால் வீடியோ மட்டும் வரவே இல்லை. பிறகு மழை வந்தது. ஹைதராபாத் அதில் மிகவும் பாதிக்கப்பட்டது. செப்டம்பர் வரை மழை தொடர்ந்தது. இப்போது இந்த நவம்பரில் வீடியோ தயார் செய்து வந்திருக்கிறோம். மேலும் இது இந்தப் படத்தின் ஸ்கேலையும் விவரிக்கும்.

Varanasi

எனக்கு சிறுவயதில் கிருஷ்ணா அவர்களின் மகத்துவம் அதிகம் தெரியாது. நான் என்.டி.ஆரின் ரசிகனாக இருந்தேன். அவர் படங்களை தான் அதிகம் பார்ப்பேன். ஆனால் திரைத்துறையில் நுழைந்த பிறகு, கிருஷ்ணா சாரின் பாரம்பரியத்தைப் புரிந்துகொண்டேன். ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த, பல விதிகளை உடைத்து புதிய பாதையை போட வேண்டும். அப்படி அவர் பல தொழில்நுட்பத்தை தெலுங்கு சினிமாவுக்கு அறிமுகம் செய்தார். முதல் சினிமாஸ்கோப் படம் `அல்லூரி சீதாராமராஜூ', முதல் ஈஸ்ட்மென்ட்கலர் படம் `ஈநாடு', முதல் 70MM படம் `சிம்ஹாசனம்', இது மட்டுமின்றி இன்னும் பல தொழில்நுட்பத்தை அவர் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

அப்படிப்பட்ட கிருஷ்ணா அவர்களின் மகனுடன் சினிமா செய்யும் போது, இன்று நாங்கள் தெலுங்கு சினிமாவுக்கு ஒரு புதிய வடிவத்தை அறிமுகப்படுத்துகிறோம் என்று பெருமையுடன் கூறுவேன். Premium Largescale Format( PLF), Filmed for Imax. நாம் எடுக்கும் படங்கள் எல்லாம் அதிகம் சினிமா ஸ்கோப்பில் எடுக்கப்படுவதே. நாம் ஐமாக்ஸில் பார்க்கும் பல படங்கள், ஸ்கோப்பில் (2.39:1) எடுக்கப்பட்டு Imaxக்காக ப்ளோ அப் செய்யப்பட்டவை. அது உண்மையான Imax இல்லை. ஆனால் ‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்’ போன்ற படங்கள் ஐமாக்ஸில் உருவாக்கப்பட்டவை. அதுவே 1.90:1 format. இப்போது நாம் எடுக்கும் படம் முழு திரையிலும் ஒளிபரப்பாகும் வடிவ IMAX (1.43:1)" என்றார்.