சினிமா

த்ரிஷ்யம் 2 படத்திற்காக உருவான ராஜாக்காடு கிராமம்

Sinekadhara

மலையாள சினிமாவில் மெகா ஹிட் ஆன “த்ரிஷ்யம்” படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பிற்காக இடுக்கியில் “ராஜாக்காடு” கிராமம் வேறொரு பகுதியில் உருவாக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. பொதுமக்கள் ஷீட்டிங்கை கண்டு ரசித்து வருகின்றனர்.

மலையாள சினிமாவில் மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு வெளியான மெகா ஹிட் திரைப்படம் “த்ரிஷ்யம்”. கேரள சினிமா வரலாற்றிலேயே அதிக வசூலை குவித்த படம் என தனி முத்திரை பதித்தது. திரையிடப்பட்ட அரங்குகளிலெல்லாம் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையோடு, பல்வேறு விருதுகளையும் குவித்தது. இந்த வெற்றிக்குப்பின்தான் “த்ரிஷ்யம்” படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படம் த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்தான்.

த்ரில்லர் கதைக்கருவை குடும்பத்தோடு இணைத்திருந்த த்ரிஷ்யம் படத்தின் அதிக சதவீத படப்பிடிப்பும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் தொடுபுழா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. முதல்பாக வெற்றிக்குப்பின் அதே குழுவினரால் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் இடுக்கியிலேயே உருவாகி வருகிறது. இதற்காக முதல்பாகத்தில் இடம்பெற்ற தொடுபுழாவில் உள்ள ஜோசப் என்பவரது வீடுதான் இரண்டாம் பாகத்திலும் பயன்படுத்தப் படுகிறது. மோகன்லால், மீனா, இவர்களின் மகள்களாக முதல் பாகத்தில் நடித்திருந்த அன்சியா ஹாசன், எஸ்தர் அனில் ஆகியோர்தான் இரண்டாம் பாகத்திலும் நடித்துவருகின்றனர்.

முதற்பாகத்தில் படத்தில் இடுக்கியின் ராஜாக்காடு என்ற ஊர் முக்கியத்துவம் பெற்றது. இரண்டாம் பாகத்திற்காக ராஜாக்காடு என்ற கிராமம், காஞ்சியார் பகுதியில் உருவாக்கப்பட்டு வருகிறது. உண்மையான ராஜாக்காட்டில் உள்ள வரவேற்பு பலகையில் துவங்கி, காவல் நிலையம், சிறு சிறு கடைகள், குடோன், கேபிள் டிவி அலுவலகம், பழைய வீடு என ஒரு கிராமமே உருவாக்கப்பட்டு படிப்பிடிப்பு நடந்து வருகிறது. ராஜாக்காட்டை, காஞ்சியாரில் தத்ரூபமாகக் கண்ட மக்கள் ஆச்சர்யத்தோடு படப்பிடிப்பைக் கண்டு ரசித்து வருகின்றனர்.