நடிகை ஸ்ரீரெட்டி எழுப்பிய குற்றச்சாட்டிற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. இவர் சில மாதங்களாக பல திரை பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறி வருகிறார். ஆந்திராவில் மையம் கொண்டிருந்த ஸ்ரீரெட்டி தற்சமயம் தமிழ் சினிமா பக்கம் தனது புகார்களை முன்வைக்க தொடங்கி இருக்கிறார். ராகவா லாரன்ஸ், சுந்தர். சி, ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட சிலர் மீது அவர் முன் வைத்த குற்றச்சாட்டிற்கு இதுவரை யாரும் நேரடியாக பதில் கூறவில்லை. முதன்முறையாக லாரன்ஸ் தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
“ஸ்ரீரெட்டி விவகாரம் பற்றி நான் தெளிவுபடுத்த வேண்டும். எனக்கு இந்த விவகாரம் ஒரு பெரிய விஷயம் இல்லை. நான் வருத்தப்படவும் இல்லை. ஆனால் பத்திரிகையாளர்கள் பலர் என்னை தொடர்பு கொண்டு விளக்கம் கொடுக்க சொல்கிறார்கள். நான் நினைக்கிறேன், எல்லோருக்கும் விளக்கம் தர இது சரியான தருணம் என்று. ஸ்ரீரெட்டி, என்னை தெலுங்கு ‘ரிபல்’ படத்தின் போது சந்தித்ததாக கூறியிருக்கிறார். நான் இந்தப் படத்தை 7 வருடங்கள் முன் எடுத்தேன். ஏழு வருடங்கள் கழித்து இவர் ஏன் இதை பேசுகிறார்?
பரவாயில்லை போகட்டும். அவர், ஹோட்டல் ரூமில் வைத்து நான் அவரை தவறாக பயன்படுத்தினேன் என்றும், அப்போது அவர் என் அறையில் கடவுள் புகைப்படத்தையும் ருத்ராட்சை மாலையையும் பார்த்ததாக சொல்கிறார். ஹோட்டல் ரூமில் ருத்ராட்சை மாலையை வைத்து பூஜை செய்ய நான் ஒரு முட்டாள் இல்லை. நான் நேரடியாக சொல்கிறேன். நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என் மனசாட்சிக்கு தெரியும் மற்றும் ஆண்டவனுக்கு தெரியும். இதற்காக நான் கோபம் கொள்ள போவதில்லை. நான் உங்களின் எல்லா பேட்டிகளையும் பார்த்தேன். நான் உங்களுக்காக கருணை கொள்கிறேன்.
உங்களுக்கு என்னதான் பிரச்னை? உங்களுக்கு வாய்ப்பு தராமல் ஏமாற்றியதுதானே? நீங்கள் சொன்னீர்கள் நீங்கள் நல்ல நடிகை என்று. நான் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை வைக்கிறேன். நீங்களும் வாருங்கள். அவர்கள் முன்னால் நான் ஒரு கதாப்பாத்திரத்தை தருகிறேன். மிக எளிமையான சில நடன அசைவுகளையும் தருகிறேன். அதுதான் நடிகைக்கு அடிப்படை தகுதி.
உண்மையான திறமையாளராக நீங்கள் இருந்தால் பத்திரிகையாளர்கள் முன்னால் அதை செய்து காட்டுங்கள். ஒரு இயக்குனநராக எனக்கு உங்கள் திறமை பிடித்திருந்தால் உடனே வாய்ப்பு தருகிறேன். அங்கேயே முன் பணமும் தருகிறேன். நான் எந்தத் தவறையும் செய்யவில்லை. ஆகவே உங்களை நேரடியாக சந்திப்பதில் எனக்கு எந்தச் சங்கடமும் இல்லை.
என் படத்தில் நடித்துவிட்டால் உங்களுக்கு அதன் பின் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். என்னை நேரடியாக சந்திக்க முடியாவிட்டால் என் மேனேஜரை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் வழக்கறிஞருடன் அல்லது நல்விரும்பியோடு வாருங்கள். நிச்சயம் உங்கள் நடிப்பு பிடித்திருந்தால் நான் உதவி செய்கிறேன். நான் ஏதோ பயந்து இதை கூறவில்லை. நான் பெண்களை மதிப்பவன். அதற்காகவே என் தாய்க்கு கோயில் கட்டியிருக்கிறேன். நல்லதை நினைப்போம் நல்லதை செய்வோம். நான் உங்கள் நல்ல வாழ்க்கைக்காக பிரார்த்திக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.