ராதிகா ஆப்தே x
சினிமா

’மார்பகங்களுக்கு கூட நிபந்தனை வைத்தார்கள்..’ ராதிகா ஆப்தே பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

பிரபல நடிகை ராதிகா ஆப்தே, சினிமாவில் அழகுக்கான எதிர்பார்ப்புகள் மற்றும் உடல் எடை குறித்த சங்கடங்களை பகிர்ந்துள்ளார்.

Johnson

பிரபல நடிகை ராதிகா ஆப்தே, சினிமாவில் அழகுக்கான எதிர்பார்ப்புகள் மற்றும் உடல் எடை குறித்த சங்கடங்களை பகிர்ந்துள்ளார். ஒரு பட வாய்ப்பை இழந்த அனுபவம், அவரை மனநிலையை மாற்ற உதவியது. தென்னிந்திய படங்களில், பெண்களின் தோற்றம் குறித்து விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அவர் எதிர்கொண்டார். இத்தகைய சூழல்களில் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.

பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. தமிழில் `தோனி', `ஆல் இன் ஆல் அழகுராஜா', `வெற்றிசெல்வன்', `கபாலி' உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்மட்டுமல்லாது சில தென்னிந்திய சினிமாக்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள `Saali Mohabbat' படம் ஸீ5 தளத்தில் வெளியாகியுள்ளது. இப்படம் சார்ந்த பேட்டிகள் அளித்த போது, தன் தோற்றம் குறித்து சினிமாவில் சந்தித்த சங்கடமான விஷயங்களை பகிர்ந்தார் ராதிகா ஆப்தே.

இந்தப் படத்தில் அழகு பற்றி இரு பெண் பாத்திரங்கள் பேசிக் கொள்வது போல காட்சி இருந்தது. நீங்கள் இப்போது இருக்கும் துறை, உங்களை ஒரு அழகான தோற்றத்தில் எதிர்பார்க்க கூடியது. எனவே அழகு குறித்த உங்கள் பார்வை என்ன? மேலும் இதை வைத்து நீங்கள் அதிகம் விமர்னத்துக்கும் ஆளாகி இருக்கிறீர்கள். அது உங்களை எப்படி பாதிக்கிறது? என்ற கேள்வி வந்த போது "சில நேரங்களில் அவை என்னை மிக பாதிக்கிறது. குறிப்பாக உடல் எடை மாற்றங்கள், வீக்கங்கள் ஏற்படும் போது எடையை குறைக்க வேண்டும் என நினைப்பேன். அதைப் பற்றி அதிகம் சிந்தித்துக் கொண்டே இருப்பேன். அதற்காக நான் மனநல ஆலோசகரிடம் கூட செல்லும் நிலை வந்தது. ஏனெனில் எனக்கு எப்போதும் எடை ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. இந்த எண்ணம் எங்கிருந்து வருகிறது என எனக்கு புரியவில்லை. நான் இயற்கையான அழகை நம்பும் நபர். ஏன் என்னை இந்த எடை அதிகரிப்பு பாதிக்கிறது என யோசித்தேன். எனக்கு ஒரு பெரிய பட வாய்ப்பு வந்தது. அப்போது நான் லண்டன் சுற்றுப்பயணம் செல்ல கிளம்பி இருந்தேன். நான் டயட் இருக்க மாட்டேன், எடை அதிகரிக்கும், ஆனாலும் வந்து எடையை குறைக்கிறேன் எனக் கூறினேன். ஆனால் திரும்பி வந்த என்னை அவர்கள் பார்த்து அதிர்ச்சியானார்கள். உடனே அந்த படத்திலிருந்து என்னை நீக்கிவிட்டார். மேலும் அந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது. அந்த நடிகர்களின் வாழ்க்கையே மாறிப்போனது. வெறும் 3 - 4 கிலோ அதிகமானதற்காக இந்த வாய்ப்பு பறிபோனது என்பதை ஏற்றுக் கொள்ளவே எனக்கு பல காலம் ஆனது. ஆனால் அது ஒரு ஆசிர்வாதம் என பின்னர் தான் புரிந்தது. நான் இப்போது இருக்கும் மனநிலையை அடைய அதுவே காரணம். நான் உறுதியான நபராக மாறினேன். நான் எப்படி இருக்கிறேனோ அதை ஏற்கும் மனநிலையை அடைந்தேன்" என்றார்.

மேலும் தென்னிந்திய படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட சம்பவத்தை பகிர்ந்தவர் "நான் நடிக்க வந்த புதிதில் பல பெரிய மனிதர்களை சந்தித்தேன். கண்டிப்பாக இவர்களுடன் பணியாற்ற முடியாது என தெரிந்து கொண்டேன். அவர்களின் பெயர்களை சொன்னால், `என்ன இவரா?' என ஆச்சரியப்படுவீர்கள். பின்பு நான் நிறைய தென்னிந்திய படங்கள் செய்தேன். எனக்கு அப்போது பணத்தேவை இருந்தது. அங்கும் நிறைய நல்ல படங்கள் உருவாகிறது. நான் தென்னிந்தியா என பொத்தம் பொதுவாக கூட விரும்பவில்லை, அங்குள்ள ஒவ்வொரு துறைகளும் சிறப்பாக இயங்குகின்றன. ஆனால் அவற்றில் சில படங்களில் நடிக்கையில் மிக மோசமான தருணங்களையும் சந்தித்திருக்கிறேன்.

அப்படி ஒரு படத்தில் நடித்த போது, ஒரு கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு நான் ஒரே பெண் மட்டும் இருந்தேன். அவர்கள் என் மார்பகத்திலும், பின்புறத்திலும் நிறைய பேட் வைக்க சொல்வார்கள். `அம்மா இன்னும் பேட் வைமா' என்பார்கள். இன்னும் எவ்வளவு வைப்பது என நான் யோசிப்பேன். அங்கிருக்கும் உதவியாளரிடம் உங்கள் அம்மா, சகோதரியாக இருந்தால் எப்படி இருக்கும் என பகிர்ந்து கொள்வேன். இயக்குநரிடம் இதற்கு மேல் முடியாது என்பேன். மேலும் என்னை சுற்றி வெறும் ஆண்கள் மட்டுமே. என் குழுவை அழைத்து வரவும் அனுமதி இல்லை. நான் இப்போது சொல்வது அவர்கள் எந்த அளவுக்கு ஒரு பெண்ணின் தோற்றம் இருக்க வேண்டும் என நிபந்தனைகள் வைக்கிறார்கள், அதுவும் வேறு எந்த பெண்ணும் துணைக்கு இல்லாத ஒரு பெண்ணிடம் கூறுகிறார்கள் என்பதை. அப்படியான நிலையை நான் நிறைய சந்தித்திருக்கிறேன். நான் தைரியமாக இருந்தாலும், உடைத்து பேசும் நபராக இருந்தாலும் மீண்டும் அது போல ஒரு சூழலை சந்திக்க நேர்ந்தால் நான் அழுதுவிடுவேன். எந்தப் பெண்ணும் அந்த நிலையில் இருக்கக்கூடாது என விரும்புகிறேன்" என்றார்.