'ராதே' படத்தின் மீது எழுந்த விமர்சனங்கள் குறித்தும், பாலிவுட்டில் சல்மான் கான் சந்திக்கும் தொடர் தோல்விகள் குறித்தும் சற்றே விரிவாக பார்ப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் ஈகைத் திருநாள் அன்று படம் ரிலீஸ் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பவர், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான். இந்த ஆண்டும் ஈகைத் திருநாள் அன்று, பிரபுதேவா இயக்கத்தில் திஷா படானி, மேகா ஆகாஷ், பரத் ஆகியோர் உடன் சல்மான் கான் நடித்த 'ராதே: யுவர் மோஸ்ட் வாண்டட் பாய்' என்கிற படத்தை ரீலீஸ் செய்திருந்தார்.
'வெடரன்' என்கிற தென் கொரியத் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக எடுத்திருந்தனர். கொரோனா நெருக்கடி காரணமாக மே 13, ஈகைத் திருநாள் அன்று நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்திருந்தார். இதுபோக தியேட்டர்கள் அனுமதித்திருந்த வெளிநாடுகளிலும், வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றிலும், நேரடியாக ரிலீஸ் ஆகியிருந்தன.
சல்மான் கான் பாலிவுட்டின் வசூல் மன்னன். இதனால் வழக்கம்போல இந்தப் படத்துக்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. ஆனால், படம் விமர்சன ரீதியாக பெரும் சறுக்கலை சந்தித்தது. சல்மானின் ரசிகர்கள் பலரும், படத்தை திட்டாத குறையாக, மோசமான விமர்சனங்களை வெளிப்படுத்தினர். ஒருகட்டத்தில் இந்த மோசமான விமர்சனங்களால் கடுப்பான, சல்மான் தரப்பு விமர்சகர்கள் மீது வழக்கு தொடுக்கும் நிலைக்கு சென்றது. ஆனால், சல்மானின் தந்தையே, " 'ராதே' அவ்வளவு சிறப்பான படம் ஒன்றும் இல்லை" எனக் கூறியது படத்தின் நிலையை எடுத்து சொல்லும் வகையில் அமைந்தது என்கிறார்கள் பாலிவுட் விமர்சகர்கள்.
பாலிவுட்டில் தற்போது இருக்கும் ஹீரோக்களில், ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வருவதில், வசூலைக் குவிப்பதில் மற்ற நடிகர்கள் எவரும் எட்ட முடியாத உயரத்தில் இருந்து வருகிறார் சல்மான். படத்துக்குப் படம், ரூ.300 கோடி, ரூ.500 கோடி என வசூல் சாதனை புரிகிறது அவரின் படம். அவரின் ஸ்டார் அந்தஸ்த்தும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. என்றாலும் சமீபத்தில் அவர் தேர்வு செய்யும் படங்கள் இதையெல்லாம் தவிடுபொடியாக்கி விடுவோமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கவலைகொள்கிறார்கள் சல்மானியாக்கள்.
'பிரேம் ரத்தன் தன் பயோ', 'தபாங் 3' வரிசையில் தற்போது 'ராதே: யுவர் மோஸ்ட் வாண்டட் பாய்'. இந்த மூன்றும், சல்மானின் கரியரில் மிக மோசமாக விமர்சிக்கப்பட்ட படங்கள். குறிப்பிட்ட இந்த மூன்று படங்களும் சல்மானின் நண்பர்களாக கருதப்படும் பிரபுதேவா போன்ற நபர்களால் இயக்கப்பட்டது. 2008-க்கு முன்பு வரை தொடர் தோல்விகளால் தவித்துவந்த சல்மானுக்கு திருப்புமுனை கொடுத்தது, தற்போது 'ராதே' படத்தை இயக்கிய பிரபுதேவாவின் 'வான்டட்' படம்தான். இப்போது இதே பிரபுதேவாவின் படம் அவருக்கு மீண்டும் சிக்கலாக அமைந்துள்ளது.
தற்போதுள்ள நிலையில், சல்மான் தனது பாலிவுட் பாட்ஷா இமேஜை, ஸ்டார் அந்தஸ்தை பாதுகாக்க விரும்பினால், அவர் புதிய இயக்குனர்களுடன் புதிய கதைக்களத்தில் பணிபுரிய வேண்டும். இங்கே ஒரு எடுத்துக்காட்டு அவசியம். சமீபத்திய ஆண்டுகளில் சல்மானின் மிகச் சிறந்த படமாக அமைந்தது 'சுல்தான்'. கிட்டத்தட்ட 'தங்கல்' மாதிரியான விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். இதை இயக்கியிருந்தவர், அலி அப்பாஸ் ஜாபர். சல்மானிடமிருந்து சிறந்த பங்களிப்பை எடுக்க தெரிந்த ஜாபருக்கு இது 3-வது படம் என்றாலும், இவரின் தலைமையில் ஸ்டார் அந்தஸ்தை விடுத்து, இந்தப் படத்தில் ரிஸ்க் எடுத்து நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்.
ஆனால் அதே ஜாபர் இயக்கத்தில் 'பாரத்' படத்தில் மீண்டும் கூட்டணி அடித்தார் சல்மான். இந்தப் படம் தோல்வி. தோல்விக்கான காரணமாக தயாரிப்பாளர்கள் புலம்பியது, சல்மானை கைகாட்டிதான். படப்பிடிப்பின்போது சல்மான் இயக்குநர் பேச்சை கேட்பதை நிறுத்தி, `மாஸ்' காட்ட அவரே இயக்குனரை இயக்க தொடங்கினார் என்று அப்போது குமுறினார்கள் தயாரிப்பாளர்கள். இதேதான் 'பஜ்ரங்கி பைஜான்' படத்தில் சல்மானை வைத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்த, கபீர் கான் அடுத்தப் படமான `டியூப்லைட்' படத்தில் சல்மானின் டாமினேஷனால் ஓரங்கட்டப்பட்டார். விளைவு சல்மான் இந்த தசாப்தத்தில் சந்தித்த மோசமான தோல்வி படமாக `டியூப்லைட்' அமைந்தது.
இதைவிட இன்னொரு சம்பவம். பாலிவுட்டின் வெற்றி இயக்குநர்களில் முக்கியமானவர் சஞ்சய் லீலா பன்சாலி. சல்மானை வைத்த மந்திரம் செய்யத் தெரிந்த இயக்குநரில் இவரும் ஒருவர். 'ஹம் தில் டி சுகே சனம்' படத்தில் சல்மானை வைத்து மேஜிக் செய்திருப்பார். இந்தப் படத்துக்கு பின் இன்ஷா அல்லாஹ் என்ற படத்தில் சல்மானுடன் சஞ்சய் லீலா பன்சாலி அணிசேர முடிவு செய்தபோது அது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால், ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களுக்கு பிறகு, நடிகர் தேர்வு முதல் அனைத்திலும் இயக்குநர் விஷயத்தில் சல்மான் மூக்கை நுழைத்தார் எனக் கூறி படத்தை கைவிட்டார் பன்சாலி. இப்போது, பன்சாலி, அலி அப்பாஸ் ஜாபர் மற்றும் கபீர் கான் இருவரும் தற்போது சல்மானின் தர்பாரை காலி செய்து, ரன்வீர் சிங், அக்சய் குமார் என மாற்று முகாம் தேடிச் சென்றுவிட்டனர்.
சல்மானுக்கு அடுத்து வரவிருக்கும் படங்கள் எப்படி இருக்கப்போகிறது என்பது தெரியவில்லை. ஆனால், அந்தப் படங்களில் தனது மாஸ் அந்தஸ்த்தை மட்டும் தூக்கிப்பிடிக்க வேண்டும் என சல்மான் நினைத்தால், பாலிவுட்டின் வசூல் பாட்ஷாவாக அவர் தொடர்வது சற்று கடினம் தான். தனக்கு பிடித்தவர்கள், தனக்கு நெருக்கமானவர்களை தாண்டி, எதிர்காலத்தில் தன்னிடமிருந்து சிறந்ததை எவ்வாறு பெறுவது என்று தெரிந்த இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றினால் தங்கள் அன்புக்குரிய சல்மான் பாய்யை தற்போது இருக்கும் நிலையைவிட ரசிகர்கள் உச்சத்தில் உட்காரவைக்கப்படுவார்கள் என்பது நிதர்சனம்.
- மலையரசு