சினிமா

கவனம் ஈர்க்கும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ ஹீரோ அறிமுக வீடியோ!

கவனம் ஈர்க்கும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ ஹீரோ அறிமுக வீடியோ!

sharpana

அல்லு அர்ஜுன் பிறந்தநாளையொட்டி ‘புஷ்பா’ படத்தின் ஹீரோ அறிமுக வீடியோவை வெளியிட்டிருக்கிறது ’புஷ்பா’ படக்குழு.

’அலா வைகுந்தபுரம் லோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்து வருகிறார். செம்மரக்கட்டை கடத்தல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்த நாளன்று வெளியானது. அப்போதே இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கூடின.

கடத்தல்கார லாரி டிரைவராக நடிக்கும் அல்லு அர்ஜுனுக்கு ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்கிறார். இந்நிலையில், இன்று அல்லு அர்ஜுன் தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை சிறப்பிக்கும் விதமாக ‘புஷ்பா’ படக்குழு ஹீரோ அறிமுக வீடியோவை நேற்றிரவு வெளியிட்டுள்ளது. அடர்ந்த காட்டுக்குள் செம்மரக்கட்டைக் கடத்தும் புஷ்பராஜாக வரும் அல்லு அர்ஜுனின் அறிமுகமும் சண்டைக்காட்சிகளும் மிக பிரம்மாண்டமாக காட்சியமைக்கப்பட்டிருக்கிறது.

காட்டின் அழகைப் போலவே பழங்குடியின பெண்ணாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா ரசிக்க வைக்கிறார். ’ஹீரோ அறிமுக வீடியோவே ஆவலைத் தூண்டி படத்திற்கான பேராவலை ஏற்படுத்தியிருக்கிறது’ என்று கருத்திட்டு வருகிறார்கள் ரசிகர்கள். ஹீரோ அறிமுக வீடியோவை இதுவரை 12 மில்லியன் பேருக்கு மேல் பார்த்திருக்கிறார்கள். யூடியூப் ட்ரெண்டிங்கிலும் முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.