நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், கடந்த டிசம்பர் 5-ம் தேதி வெளியான ’புஷ்பா 2’ திரைப்படம், பாக்ஸ் ஆஃபிஸில் 1500 கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்துவருகிறது.
அதேநேரத்தில், இந்தப் படத்தின் ஸ்பெஷல் ஷோவிற்கு ஹைதராபாத் சந்தியா திரையரங்கிற்குச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது மகனும் இதில் பாதிக்கப்பட்டு தற்போது வரை கோமாவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே பெண் உயிரிழப்பு தொடர்பாக அல்லு அர்ஜுன் மற்றும் திரையரங்கம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இந்த விவகாரம் தெலங்கானா அரசியல் வரை பரபரப்புக்குள்ளாகி வரும் நிலையில், அல்லு அர்ஜுனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு, அதன்படி இன்று ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜூனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதும் தியேட்டருக்கு சென்றதால் தான் அதிகப்படியான கூட்டம் ஏற்பட்டு நெரிசலில் பெண் சிக்கி உயிரிழந்ததாக காவல்துறையால் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. பெண்ணின் மகனும் தொடர்ந்து சிகிச்சையில் இருந்துவரும் நிலையில், தற்போது உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு 2 கோடி இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவந்திருக்கும் தகவலின் படி, உயிரிழந்த பெண்ணின் மகனின் உடல்நிலை குறித்து அறிய ஹைதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் இழப்பீடு தொகையை அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின் படி அல்லு அர்ஜுன் சார்பில் 1 கோடி ரூபாயும், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பில் தலா 50 லட்சமும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
சிறுவனின் உடல்நிலை குறித்து பேசியிருக்கும் அல்லு அரவிந்த், சிறுவன் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு வென்டிலேட்டர் அகற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.