புஷ்பா 2 - கூட்டநெரிசல் விவகாரம் எக்ஸ் தளம்
சினிமா

புஷ்பா 2 கூட்ட நெரிசலில் தாய் உயிரிழந்த விவகாரம்... மகன் மூளைச்சாவு அடைந்ததாக தகவல்!

புஷ்பா 2 படத்தின் முதல் காட்சியைப் பார்க்க சென்ற பெண்ணின் மகன் மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருக்கிறது என தகவல் வெளியாகியிருக்கிறது.

karthi Kg

புஷ்பா 2 திரைப்படம் ரூ 1000 கோடியைக் கடந்து வசூலாகிக் கொண்டிருக்கிறது. அதேநேரம், புஷ்பா நாயகன் அல்லு அர்ஜூன் முதல் காட்சியைப் பார்த்த திரையரங்கில், திரைப்படத்தைப் பார்க்கச் சென்ற பெண்ணுக்கு பெரும் துயரம் ஏற்பட்டது.

‘எப்படியாவது அல்லு அர்ஜூனை பார்த்துவிட மாட்டோமா’ என குடும்பத்துடன் அதிகாலை காட்சிக்கு அந்தப் பெண் சென்றிருக்கிறார். கூட்ட நெரிசலில் சிக்கிய அந்தப் பெண், அன்றே இறந்துவிட, அந்தப் பெண்ணின் குழந்தை மூச்சு விடுவதற்கு சிரமத்துக்குள்ளானார். அன்றே மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜூனைக் கைது செய்தது, தெலங்கானா காவல்துறை. இருப்பினும் சிறை வைக்கப்பட்ட ஒரே நாளில், அவர் பிணையில் வெளியே வந்தார்.

அல்லு அர்ஜுன் கைதுபற்றி தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “ஒரு நடிகருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவர் குழந்தைக்கும் ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள். அவர் ஒரு ஹீரோ. ஆனால், அந்த குழந்தை அதன் தாயை இழந்திருக்கிறது. அந்தக் குழந்தையும் உயிருக்குப் போராடி வருகிறது. ஆனால், அதுகுறித்து யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை” என காட்டமாக பேசியிருந்தார்.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் ஜாமீனை எதிர்த்து தெலங்கானா காவல்துறை உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்னொருபுறம், அந்த 9 வயது சிறுவன் ஸ்ரீதஜ் மூளைச் சாவு அடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீதஜிற்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டுவருகிறது.

புஷ்பா 2 படத்தின் முதல் காட்சியைப் பார்க்கச் சென்று பெண்ணுக்கு நேர்ந்த கதி, இனி யாருக்கும் நிகழக்கூடாது. இனியாவது அரசுகள் இதுமாதிரியான விஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது. அதே சமயம், சினிமா ரசிகர்களோ, ‘இதற்காகவெல்லாம் அதிகாலை காட்சியை ரத்து செய்யக்கூடாது’ என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.