பிரபல பஞ்சாபி நடிகர் மற்றும் பாடிபில்டரான வரிந்தர் குமான், மாரடைப்பால் காலமானார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட வரிந்தர் குமான், ஜலந்தரில் வசித்து வந்தார். அங்கு ஓர் உடற்பயிற்சி கூடமும் நடத்தி வந்தார். ’சைவ பாடிபில்டர்’ என்று அழைக்கப்பட்ட இவர், உடற்தகுதி மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். மேலும் தனது உடற்பயிற்சி வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பகிர்ந்துவந்தார். ஆளுமைமிக்க தோற்றம் மற்றும் உடற்தகுதிக்கான அர்ப்பணிப்பு மூலம் அறியப்பட்ட அவர், பஞ்சாபி சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பிடித்திருந்தார். கடைசியாக அவர், சல்மான் கானின் ’டைகர் 3’ திரைப்படத்தின் மூலம் திரையில் தோன்றியிருந்தார். முன்னதாக, 2014இல் 'ரோர்: டைகர்ஸ் ஆஃப் சுந்தர்பன்ஸ்' மற்றும் 2019இல் 'மர்ஜாவன்' போன்ற பிற இந்திப் படங்களிலும் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் பணியாற்றியுள்ளார். 2012இல் 'கபடி ஒன்ஸ் அகெய்ன்' என்ற பஞ்சாபி படத்திலும் பணியாற்றியுள்ளார்.
இவர், 2009இல் மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்றவர் ஆவார். தவிர, மிஸ்டர் ஆசியா போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் ஆவார். 2027ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும் அவர் விருப்பம் தெரிவித்தார். இந்த நிலையில், நேற்று மாலை அவர் மாரடைப்பால் காலமானதாக அவரது மருமகன் அமன்ஜோத் சிங் குமான் தெரிவித்துள்ளார். முன்னதாக, வரிந்தர் குமான் தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு சிகிச்சைக்காக அமிர்தசரஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் அவரது மேலாளர் யத்விந்தர் சிங் தெரிவித்துள்ளார். அவருடைய மறைவு ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரிந்தர் குமானின் மறைவுக்கு, ரசிகர்கள் மற்றும் திரைக்கலைஞர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.