கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் புனீத் ராஜ்குமார். 2021ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக இவர் இறந்து போனது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவர் மறைந்த பின் மீண்டும் இவரை திரையில் கொண்டு வர வேண்டும் என அவர் ஹீரோவாக நடித்த `ஜேம்ஸ்', கேமியோ ரோலில் நடித்த `லக்கிமேன்' போன்ற படங்கள் வெளியிடப்பட்டது. மேலும் கர்நாடக காடுகளை பற்றி அவர் தயாரித்து, திரையில் தோன்றிய `கந்தட குடி' (Gandhada Gudi) ஆவணப்படத்தையும் திரையரங்கில் வெளியிட்டார்கள்.
இப்போது மீண்டும் ஒருமுறை புனீத் ராஜ்குமாரை திரையில் காணும் ஒரு வாய்ப்பை உருவாக்கி இருக்கிறார்கள். கன்னடத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் 'மாரிகல்லு'. கடம்பர்கள் காலகட்டத்தை சேர்ந்த புதையலை தேடும் கதையாக இந்த சீரிஸ் உருவாகியிருக்கிறது. இந்த சீரிஸின் ஒரு பகுதியாக கடம்ப ராஜ்ஜியத்தை பற்றியும், அதன் அரசர் மயூரவர்மா பற்றியும் வருகிறது. AI பயன்படுத்தி அந்த மயூரவர்மா கதாப்பாத்திரத்தில் மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரை கொண்டு வந்திருக்கிறார்கள்.
கர்நாடகத்தின் சிறப்புகளை சொல்லும் கதைகளை உருவாக்க வேண்டும் என்பது புனீத் ராஜ்குமார் ஆசை என்பதால், இந்த சீரிஸை புனீத் துவங்கிய PRK Production மூலம் தயாரித்துள்ளார் அவரது மனைவி அஷ்வினி புனீத் ராஜ்குமார். சமீபத்தில் வெளியான இந்த வெப் சீரிஸின் டீசரில் புனீத் ராஜ்குமாரின் AI உருவம் இடம்பெற்றிருந்தது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. இந்த சீரிஸ் அக்டோபர் 31ம் தேதி Zee 5 தளத்தில் வெளியாகிறது.