இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக வரக்கூடிய ஒரு சக வீரரைத் தேர்வு செய்யுமாறு கேட்டபோது, சட்டீஸ்வர் புஜாரா ஒரு ஆச்சரியமான பெயரை தேர்வு செய்தார்.
சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒரு இந்திய வீரரைத் தேர்ந்தெடுத்த புஜாரா, அவருக்கு தலைமை பண்புக்கான அனைத்து பண்புகளும் இருப்பதாக கூறினார். அவருடன் தனது டெஸ்ட் வாழ்க்கையின் பெரும்பகுதியில் ஒரு தசாப்த காலமாக விளையாடியுள்ளார் புஜாரா.
கடந்த காலங்களில் பல கிரிக்கெட் நிபுணர்கள் தோனியை இந்திய பயிற்சியாளர் பதவிக்கு பரிந்துரைத்திருந்தாலும், எதிர்காலத்தில் இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடிய திறன் உள்ளவராக ரவிச்சந்திரன் அஸ்வினின் பெயரை புஜாரா குறிப்பிட்டார்.
103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவரான புஜாரா, இந்தியாவின் நம்பர் 3 பேட்டராக வெற்றிகரமான வீரராக ஜொலித்தார்.
இந்நிலையில் சமீபத்திய ESPnCricinfo உடனான உரையாடலின் போது, எதிர்காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக வருவதற்கு அதிக வாய்ப்புள்ள சக வீரர் யார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த புஜாரா, ரவிச்சந்திரன் அஸ்வின் என்று கூறினார். அவரிடம் தலைமைத்துவத்திற்கான பண்புகள் இருப்பதாக தெரிவித்த அவர், 24*7 கிரிக்கெட் பற்றி விவாதிக்கக்கூடியவர் அஸ்வின் என்று கூறினார்.
106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அஸ்வின், இந்தியாவின் இரண்டாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராகவும் இருந்துவருகிறார்.