சினிமா

PT Web Explainer: ஓடிடி-க்கு 'சென்சார்' அச்சுறுத்தலும் இணைய சுதந்திரச் சூழலும்!

PT Web Explainer: ஓடிடி-க்கு 'சென்சார்' அச்சுறுத்தலும் இணைய சுதந்திரச் சூழலும்!

webteam

ஓடிடி மேடைகளில் அடுத்ததாக என்ன தொடர் அல்லது என்ன திரைப்படம் வெளியாகும் என ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் எல்லாம், இந்த சேவைகள் இனி தணிக்கைக்கு உள்ளாகுமா என கவலையோடு விவாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி சேவைகள் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஆய்வுக்கு கீழ் கொண்டுவர அரசு தீர்மானித்திருப்பதே இதற்கு காரணம். 


இதுவரை, ஓடிடி சேவைகள் உள்ளிட்ட ஆன்லைன் படைப்புகள் எந்தவித கட்டுப்பாட்டுக்கும் உள்ளாகாத நிலையில், ஓடிடி நிகழ்ச்சிகள் மற்றும் இணைய செய்திகள் இப்போது தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருப்பது. இவை தணிக்கை உள்ளிட்ட கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகலாம் எனும் எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஓடிடி மேடைகளில் இயங்கி வரும் படைப்பாளிகளும், கலைஞர்களும் அரசின் இந்த நடவடிக்கை தணிக்கைக்கு வழி வகுக்கும் என ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அரசின் புதிய உத்தரவு, ஓடிடி சேவைகள் மீது எந்த விதத்தில் தாக்கம் செலுத்தும் என்பதை பார்க்கலாம். 

 கொஞ்சம் வரலாறு:

ஓடிடி சேவைகள் தணிக்கைக்கு உள்ளாகுமா? இதனால் படைப்புச் சுதந்திரம் பாதிக்கப்படுமா? இது இணைய சுதந்திரத்திற்கு வேட்டு வைப்பதாக அமையுமா? என்பன போன்ற பல கேள்விகள் எழுந்தாலும், இவற்றுக்கான பதில்களை பார்ப்பதற்கு முன், முதலில் ஓடிடி சேவைகளின் தற்போதைய நிலையைப் பார்க்கலாம்.

இணையத்தில் ஸ்டிரீமிங் முறையில் ஆடியோ மற்றும் வீடியோ உள்ளடக்கத்தை வழங்கும் சேவையே ஓவர் தி டாப் (OTT - ஓடிடி) என குறிப்பிடப்படுகிறது. வழக்கமான முறையில் உள்ளடக்கத்தை டவுன்லோடு செய்யாமலேயே பார்க்கலாம் என்பது மட்டும் அல்லாமல், பாரம்பரியமான விநியோக வழிகளின் தேவை இல்லாமல் நேரடியாக இணையம் வழியே உள்ளடக்கத்தைப் பார்க்க வழி செய்வதால், இந்த சேவைகள் 'ஓவர் தி டாப்' என குறிப்பிடப்படுகின்றன. 


ஒருவிதத்தில் திரையரங்க வெளியீடு, தொலைக்காட்சி போன்ற மரபு சார்ந்த விநியோக முறைக்கு ஓடிடி சவாலானது என்று கருதலாம். அல்லது, தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அவற்றின் நவீன நீட்சியாக விளங்குபவை என்றும் கருதலாம்.

எது எப்படி இருந்தாலும், அண்மைக் காலத்தில் ஓடிடி மேடைகள் பெரும் வரவேற்பு பெற்று அமோக வளர்ச்சி கண்டு வருகின்றன. அமெரிக்காவின் 'நெட்பிளிக்ஸ்' இதற்கான துவக்கப்புள்ளியாக கருதப்பட்டாலும், இத்துறையில் எண்ணற்ற நிறுவனங்கள் உருவாகிவிட்டன. இந்தியாவிலும் பல்வேறு நிறுவனங்கள் ஓடிடி சேவையை வழங்கி வருகின்றன.

கட்டுப்பாடு தேவை:

ஓடிடி சேவைகள் வளர்ச்சியால் வெப் சீரிஸ் போன்றவை பிரபலமாகி உள்ளன. திரைப்படங்கள், குறும்படங்கள் மட்டும் அல்லாது, ஆவணப்படங்களும் அதிகம் வெளியாகின்றன. வெப் சீரிஸ்கள் புதுமையானதும் துணிச்சலானதுமான ஐடியாக்களை மையாக கொண்டு எடுக்கப்படுகின்றன. வழக்கமான ஊடக வடிவில் சொல்ல முடியாத கதைகள், ஓடிடி மேடையில் சாத்தியமாவதாக படைப்பாளிகள் கருதுகின்றனர்.

விமர்சன நோக்கிலான படைப்புகளும் ஓடிடி மேடைகளில் வெளியாகின்றன. தொழில்நுட்ப நோக்கிலும், பொருளாதார நோக்கிலும் இவை படைப்பாளிகளுக்கு புதிய வாய்ப்புகளாக அமைந்துள்ள நிலையில், ரசிகர்களும் மாறுபட்ட உள்ளடக்கத்தை பார்த்து ரசிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இவை எல்லாம் சாதகமான அம்சங்களாக கருதப்பட்டாலும், ஓடிடி மேடைகளில் ஆபாச உள்ளடக்கம் வெளியாவது குறித்தும் கவலை தெரிவிக்கப்படுகிறது. இந்த மேடைகள் எவ்வித கட்டுப்பாட்டுக்கும் உள்ளாகததே இதற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. 


சுய தணிக்கை:

ஓடிடி சேவைகள் பிரபலமாகி வந்த நிலையில், இவற்றில் வெளியாகும் உள்ளடக்கம் தொடர்பான கட்டுப்பாடு தேவை எனும் கருத்தும் வலுப்பெற்றது. திரைப்படங்களுக்கு தணிக்கை இருப்பதுபோல, இணையத்தில் வெளியாகும் படைப்புகளுக்கும் கட்டுப்பாடு வேண்டாமா என்ற கேள்வி எழுந்தது.

அதேநேரத்தில் இணைய படைப்புகளை கட்டுப்படுத்தும் செயல், தணிக்கைக்கு வழி வகுக்கும் என்ற கருத்தும், இது விமர்சன குரல்களை நெறிக்க பயன்படுத்தப்படலாம் என்ற விமர்சனமும் தீவிரமாக எழுந்தது.

இதனிடையே, ஓடிடி மேடைகள் சார்பாக இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கம் சுய தணிக்கை யோசனையை முன்வைத்தது. எனினும் இந்த யோசனை மத்திய அரசால் ஏற்கப்படவில்லை. இந்தப் பின்னணியில்தான் ஓடிடி உள்ளடக்கம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. 


அரசு கட்டுப்பாடு:

மேலோட்டமாக பார்த்தால், ஓடிடி உள்ளிட்ட இணைய படைப்புகளுக்கு ஏதேனும் ஒரு வகையான கட்டுப்பாடு தேவை எனும் கருத்து முன்வைக்கப்படுவதை புரிந்துகொள்ளலாம். ஏனெனில், அச்சு ஊடகங்கள், பிரன் கவுன்சில் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகள், கேபிள் நெட்வொர்க் சட்டத்தின் கீழ் வருகின்றன. திரைப்படங்களுக்கு தணிக்கை குழு இருக்கிறது.

இணைய ஊடகங்களுக்கு இத்தகைய கட்டுப்பாடு எதுவும் இல்லை என்பதால், இத்தகைய கட்டுப்பாடு அவசியம் என வாதிடப்படுகிறது. இதன் விளைவாகவே, ஓடிடி உள்ளடக்கம் மற்றும் ஆன்லைன் செய்திகளை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஆய்வின் கீழ் கொண்டு வரும் ஆணையை அரசு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய சுதந்திரம் என்னாகும்?


அரசின் இந்த நடவடிக்கை ஓடிடி சேவைகளின் செயல்பாடு மட்டும் அல்லாது இணைய ஊடகத்துறையில் பெரும் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் இணைய உள்ளடக்கத்திற்கு கட்டுப்பாடு தேவை என சொல்லப்படுவது ஏற்புடையதாக தோன்றினாலும், இது தணிக்கைக்கு வழி வகுக்க வாய்ப்பிருப்பதும், இதன் காரணமாக படைப்புச் சுதந்திரம் பாதிக்கப்படலாம் எனும் அச்சமும் எழுகிறது.

அது மட்டும் அல்லாமல், இந்த அம்சங்களை விமர்சன நோக்கிலான உள்ளடக்கத்தை கட்டுப்படுத்த அரசு பயன்படுத்தலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இதனிடையே, குறிப்பிட்ட தரப்பினர், அண்மையில் ட்விட்டர் உள்ளிட்ட ஊடகங்களில், 'ஆன்லைன் தொடர்களுக்கு தணிக்கை தேவை' எனும் பிரசாரத்தை மேற்கொண்டதையும் இணைய ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 


ஓடிடி மேடைகள் மற்றும் ஆன்லைன் செய்திகள் மீதான கட்டுப்பாடு எவ்விதம் அமையும் என்பது இன்னமும் தெளிவுப்படுத்தப்படவில்லை. கேபிள் நெட்வொர்க் நெறிமுறைகள் இணைய உள்ளடக்கத்திற்கும் பொருந்தும் வகையில் நடவடிகை அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான புதிய குழு அமைக்கப்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

ஓடிடி சேவைகள் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில், அவை முதன்முறையாக கட்டுப்பாடு எனும் சவாலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இணைய சுதந்திரத்தில் ஆர்வம் உள்ளவர்கள் இந்தப் பரப்பில் ஏற்பட உள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு கொஞ்சம் படபடப்போடுதான் காத்திருக்க வேண்டும்.