புகார் கூறப்பட்ட ஹீரோக்கள் மீது சினிமா தயாரிப்பாளர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நடிகர் சிம்பு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான இந்தப்படம் ஃபிளாப் ஆனது. இதன் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்பு மீது பரபரப்பு புகார் கூறினார். அதில், சரியான நேரத்துக்கு வந்து சிம்பு நடித்துக் கொடுக்காததால் படப்பிடிப்பு செலவு அதிகமானது என்றும் இதனால் ஏற்பட்ட பல கோடி நஷ்டத்தை சிம்பு ஈடுகட்ட வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக பிரஸ் மீட் வைத்தும் புகார் கூறினார்.
இதே போல நடிகை த்ரிஷா, ’சாமி 2’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். ஆனால், திடீரென்று அந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டார். படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷூக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதால் த்ரிஷா விலகியதாகக் கூறப்பட்டது. அட்வான்ஸ் வாங்கிவிட்டு மறுத்துவிட்டார் என்று ’சாமி 2’ படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் த்ரிஷா மீது புகார் கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் ஜெய் மீது, ’பலூன்’ படத் தயாரிப்பாளர்கள் நந்தகுமார், அருண் பாலாஜி ஆகியோர் பரபரப்பு புகார் ஒன்றைக் கூறினார். அதில் படம், 9 மாதங்கள் தாமதமாக வெளியானது. இதற்கு காரணம் ஜெய். படப்பிடிப்புக்கு அவர் வரவில்லை. ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனால் படவெளியீடு தள்ளிப்போனது. இவரால் ஏற்பட்ட நஷ்டமான, ரூ.1 கோடியே 50 லட்சத்தை உடனடியாக ஜெய் எங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தயாரிப்பாளர் சங்கத்தில் கூறியிருந்தார்.
வடிவேலு நடிக்கும் ’இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தை டைரக்டர் ஷங்கர் தயாரித்தார். சிம்புதேவன் இயக்க இருந்த இந்தப் படம் தொடக்க நிலையிலேயே பிரச்னையை சந்தித்தது. இதற்கு வடிவேலுதான் காரணம் என்று கூறப்பட்டது. இதனால் படத்துக்குப் பல கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட, செட் வீணானது. இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தார் இயக்குனர் ஷங்கர்.
மேற்கண்ட இந்தப் புகார்கள் குறித்து தயாரிப்பாளர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளர் சங்கத்தை நம்பி இனி பயனில்லை என்று இயக்குனர் ஷங்கர், போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்க உள்ளார் என்று தெரிகிறது. இதே போல தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் சிம்பு மீது போலீசில் புகார் கொடுக்க உள்ளார்.