சினிமா

திலீப்பால் ரூ.30 கோடி நஷ்டம்: ஜாமீனில் வந்தாலும் நடிக்க முடியுமா?

திலீப்பால் ரூ.30 கோடி நஷ்டம்: ஜாமீனில் வந்தாலும் நடிக்க முடியுமா?

webteam

பாவனா வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நடித்து வந்த படங்களின் தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளனர்.

ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் திலீப். பெரும்பாலும் நகைச்சுவை நிறைந்த கதாப்பாத்திரங்களில் நடித்து, எல்லோரையும் சிரிக்க வைத்து ஜனப்ரிய நாயகன் என்று பெயர் பெற்ற இவர், பாவனா வழக்கில் கைது செய்யப்பட்டதையடுத்து ஒரே நாளில் கேரள மக்களின் வில்லனாக மாற்றியிருக்கிறார். இதனால், அவர் நடித்து வரும் 'கம்மார சம்பவம்', 'புரஃபசர் டங்கன்' போன்ற படங்களின் நிலையும், வரும் 21 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த 'ராமலீலா' படமும் கேள்விக்குறியாகியுள்ளன.

திலீப் நடித்து வரும், திரைப்படங்களில் அவர் ஒரு நடிகர் மட்டுமே, அவரைத் தவிர்த்து பலரும் ஒரு திரைப்படத்தை நம்பியிருப்பதாகவும், அதனை பொதுமக்கள் புரிந்து கொண்டு வியாபார ரீதியாக பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர் திரைப்பட தயாரிப்பாளர்கள்.

கடந்த திங்கட்கிழமை திலீப் கைது செய்யப்பட்டதையடுத்து, நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட திரைத்துறை சார்ந்த அனைத்து அமைப்புகளின் அடிப்படை உறுப்பினர் பதிவிலிருந்தும் அவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால், அவர் வெளிவந்தாலும் உடனே படப்பிடிப்பை தொடங்க முடியுமா? என்ற குழப்பமும் நிலவுகிறது.