ராஷ்மிகா மந்தனாவின் அர்ப்பணிப்பு மற்றும் பணியாற்றும் நேரம் குறித்து தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் குமார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தீபிகா படுகோனேவின் கருத்துக்களை கிண்டலடிக்கும் வகையில் அவர் பேசியது, ராஷ்மிகாவின் பணி நேரத்தை அன்பின் அடிப்படையில் அளவிடுவார் எனக் கூறியதோடு, அவரை பப்ளிசிட்டி அல்ல, சிம்ப்ளிசிட்டி பின்பற்றுபவர் என புகழ்ந்தார்.
ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ராகுல் ரவீந்திரா இயக்கியுள்ள தெலுங்குப் படம் `தி கேர்ள் ஃப்ரெண்ட்'. இப்படம் நவம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ராஷ்மிகா, தீக்ஷித், ராகுல் ரவீந்திரா உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் குமார் என்ற SKN பேசிய விஷயம் பேசு பொருளாகி இருக்கிறது. சில மாதங்களாகவே பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, சினிமாவில் நடிகைகள் பணியாற்றும் நேரம் பற்றி பேசி வருகிறார். அவர் வேலை நேரத்தில் கறாராக இருப்பதால் சில படங்களில் இருந்து அவர் விலக்கப்பட்டதும் நாம் அறிந்ததே. குறிப்பாக தெலுங்குப் படங்களான `ஸ்ப்ரிட்' மற்றும் `கல்கி 2' போன்ற படங்கள் இந்த சர்ச்சையில் இடம்பெற்றன. இந்நிலையில் தெலுங்கு சினிமாவை சார்ந்த ஸ்ரீனிவாஸ் குமார், தீபிகாவை கிண்டலடிக்கும் தொனியில் பேசியுள்ளார்.
அவர் பேசிய போது "நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா, `அனிமல்', `புஷ்பா', புஷ்பா 2', `தாமா' என பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், சிலரிடம் இனிமை இருக்கும், சிலர் Coolலாக இருப்பார்கள், சிலர் HOT-ஆக இருப்பார்கள். இந்த மூன்றையும் மிக்சியில் அரைத்தது போல இருக்கக்கூடியவர் ரஷ்மிகா. எவ்வளவு வளர்ந்தாலும் அவர் பின்பற்றுவது பப்ளிசிட்டி இல்லை, சிம்ப்ளிசிட்டி. Pan India அளவுக்கு வளர்ந்த ஒரு நடிகைகளில், இவ்வளவு அர்ப்பணிப்பு உள்ள ஒரு நடிகையை நான் பார்த்தது இல்லை. எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும்? என்பதில் விவாதங்கள் நடக்கும் இந்த காலத்தில், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்வேன் எனும் ஒரே ஒரு Pan India நடிகை ராஷ்மிகா தான்.
அவர் வேலையை நேரத்தை வைத்து அளவிட மாட்டார், அன்பை வைத்து அளவிடுவார். அன்புக்கு நேரம் காலம் இருக்காது. அதனாலேயே ராஷ்மிகாவை நம் வீட்டில் ஒருவராக பார்க்கிறோம். இந்தப் படத்திற்கு இன்னொரு சிறப்பும் உள்ளது. ராஷ்மிகா ஹீரோயினாக நடித்த `கீதா கோவிந்தம்' படத்தில் அனு இமானுவேல் நடித்தார். இப்போது இந்தப் படத்திலும் அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படமும் `கீதா கோவிந்தம்' போல பெரிய ஹிட்டாக வேண்டும்." எனக் கூறினார். பெண் நடிகைகளுக்கு வரும் சவால்களையும், ஆண்களுக்கு கிடைக்கும் சலுகைகள் பெண்களுக்கு கிடைப்பதே இல்லை எனவும் பல இடங்களில் தீபிகா தீவிரமாக பதிவு செய்து வரும் நிலையில், அதனை கிண்டல் செய்யும் தொனியில் பேசிய ஸ்ரீனிவாஸ் குமார் பேச்சு சர்ச்சசையாகியுள்ளது.