தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ். தெலுங்கு முன்னணி நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண், மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன், ஜூனியர் என்டிஆர், நானி எனப் பலரது படங்களை தயாரித்துள்ளது. அஜித் நடித்த `குட் பேட் அக்லி', பிரதீப் ரங்கநாதனின் `ட்யூட்' படங்கள் மூலம் தமிழிலும் தயாரிப்பை துவங்கியுள்ளனர். இவர்களது தயாரிப்பில் ராம் பொத்தினேனி, உபேந்திரா நடித்து கடந்த வாரம் வெளியான படம் `ஆந்திரா கிங் தாலுகா'. இப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் தயாரிப்பாளர் ரவி ஷங்கரிடம், தயாரிப்பாளர்களின் கஷ்ட, நஷ்டங்களை புரிந்து கொள்ளும் ஹீரோக்கள் இங்கு உள்ளனரா? எனக் கேட்கப்பட அதற்கு அவர் கொடுத்த பதில் இப்போது பேசு பொருளாகி இருக்கிறது. அந்த பதிலில் "நிறைய பேர் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு சொல்வதென்றால் `ரங்கஸ்தலம்' படத்தின் போது ராம்சரண் தனது சம்பளத்தை வாங்கவே இல்லை. படம் வெளியாக போகிறது, வாங்கிக் கொள்ளுங்கள் என நாங்கள் சொன்ன போதும் கூட, பொறுங்கள் எனக்கு தேவைப்படும் போது வாங்கிக் கொள்கிறேன் என்றார். படம் வெளியாகி ஒன்றிரண்டு ஆண்டுகள் கழித்து தான் சம்பளத்தை பெற்றுக் கொண்டார்.
மகேஷ்பாபு கூட `சர்க்கார் வாரி பாட்டா' படத்தின் சம்பளத்தை ஒரு வருடம் கழித்தே வாங்கிக் கொண்டார். சிரஞ்சீவி சார் `வால்டேர் வீரய்யா' படத்தின் சம்பளத்தையும் தாமதமாகவே பெற்றுக் கொண்டார். பவன் கல்யாண் சார், உங்களுக்கு லாபம் வந்தால் கொடுங்கள், இல்லை எனில் வேண்டாம் என்றார். புஷ்பா படத்திற்கு அல்லு அர்ஜூனும் தாமதமாகவே சம்பளம் பெற்றுக் கொண்டார். சிலர் ஓடிடி வெளியீட்டில் பணம் கிடைத்த பின் கொடுங்கள் என்பார்கள். இங்குள்ள பல நடிகர்கள் தயாரிப்பாளர்கள் நிலையை புரிந்து கொள்பவர்களே" என்றார். தொடர்சியாக தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் சம்பளங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற விவாதங்கள் நடந்து வரும் சூழலில், தெலுங்கு சினிமா ஹீரோக்கள் சம்பள விஷயத்தை கையாள்வது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.