துபாயில் காலமான நடிகை ஸ்ரீதேவியின் உடலை இன்றிரவு இந்தியாவுக்கு கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
துபாயில் காலமான நடிகை ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். அதற்கேற்ப ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டுவர பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் தனி விமானம், இன்று மாலை 4 மணியளவில் மும்பையிலிருந்து புறப்பட்டு துபாய் சென்றுள்ளது. அந்த விமானம் ஸ்ரீதேவியின் உடலுடன் இன்றிரவு 9 மணி வாக்கில் மும்பை திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது.
தற்போது தடயவியல் விசாரணை அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், ஸ்ரீதேவியின் உடல் இன்று இரவு இந்தியா வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.
முன்னதாக, திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அங்குள்ள சட்ட விதிகளின்படி மருத்துவ நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. மருத்துவ சோதனைக்கு பிறகு ஸ்ரீதேவியின் உடல் துபாய் தலைமை காவல் அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டது. ஸ்ரீதேவியின் உடலை அனுப்பி வைப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அவரது குடும்பத்தினருக்கு செய்து வருவதாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்தியத் தூதர் வ்தீப் சூரி தெரிவித்திருந்தார். இதனிடையே, ஸ்ரீதேவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்காக மும்பையில் உள்ள அவரது இல்லம் முன் ஏராளமான ரசிகர்கள் திரண்டுள்ளனர்.