எனது பிரச்னையை சரி செய்வதற்குள் பிரியங்காவின் காதலில், நிக் ஜோனாஸ் விழுந்துவிட்டார் என்று அவரது முன்னாள் காதலி தெரிவித்துள்ளார்.
தமிழில் விஜய் ஹீரோவாக நடித்த ’தமிழன்’ படத்தின் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் இந்தியில் நடித்த அவர், அங்கு முன்னணி நடிகையானார். இப்போது ஹாலிவுட் படங்களிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னை விட பத்து வயது குறைந்த பாப் பாடகரும் ஹாலிவுட் நடிகருமான நிக் ஜோனாஸை அவர் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாயின. இருவரும் ஒன்றாகச் சுற்றும் புகைப்படங்களும் இணையதளங்களில் வெளியாகி வருகின்றன.
நிக் ஜோனாஸின் உறவினர் திருமணத்திலும் பிரியங்கா கலந்துகொண்டார். இதை வைத்து இருவரும் காதலிப்பது உண்மைதான் என்று கூறப் படுகிறது. ஆனால், பிரியங்கா சோப்ரா இதுபற்றி ஏதும் தெரிவிக்கவில்லை.
(நிக்குடன் டெல்டா)
இந்நிலையில் நிக் ஜோனாஸின் முன்னாள் காதலி டெல்டா கூட்ரெம் (Delta Goodrem), தனக்கும் நிக்கிற்கும் பிரச்னை ஏற்பட்டது உண்மைதான் என்று கூறியிருக்கிறார். ஆஸ்திரேலியா பாடகியான இவரும் நிக்கும் 2011 ஆம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர்.
‘எனக்கும் நிக்கிற்கும் சில விவாதங்கள் ஏற்பட்டது. அவர் ஆஸ்திரேலியா சென்றபோது அதைச் சரிப்படுத்தி விடலாம் என முயற்சி செய்தேன். ஆனால், அதற்கு முன்பே பிரியங்காவின் காதலில் அவர் விழுந்துவிட்டார்’ என்று தெரிவித்துள்ளார்.