சினிமா

தந்தை இறப்பு; ஆன்மீகம்; சோதிக்கப்பட்ட தருணங்கள்- பேட்டியில் உடைந்த பிரியங்கா சோப்ரா

webteam

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தந்தை இறப்புக்குப்பிறகு தனக்கும் இறைவனுக்கும் இடையேயான உறவுமுறை எப்படி மாறியது என்று கூறியுள்ளார்.

அமெரிக்க தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பிரியங்கா சோப்ராவிடம் தொகுப்பாளர் "உங்கள் வாழ்கையில் நீங்கள் அதிகமாக சோதிக்கப்பட்டது எப்போது" எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பிரியங்கா, “ எனது தந்தை இறந்த தருணங்களில் நான் மிகவும் கோபமாக இருந்தேன். அப்போது எனக்கும் இறைவனுக்கும் இடையேயான உறவுமுறையில் சின்ன மாற்றம் ஏற்பட்டது. கடவுள் அந்தத் துக்கத்தில் இருந்து என்னை வெளிக்கொண்டு வந்து பாதுகாத்ததை உணர முடிந்தது. அந்த நேரத்தில்தான் நான் அதிகமாக சோதிக்கப்பட்டதாக கருதுகிறேன்.

அந்தத்தருணத்தில் செல்லவேண்டிய எல்லா கோயில்களுக்கும் சென்றேன். செய்ய வேண்டிய எல்லா பிரார்த்தனைகளையும் செய்தேன். சந்திக்க வேண்டிய எல்லா குருமார்களையும் சந்தித்தேன். சந்திக்க வேண்டிய எல்லா மருத்துவர்களையும் சந்தித்தேன். எனது தந்தையை சிங்கப்பூர், நியூயார்க், யூரோப், இந்தியாவிலும்  பல இடங்களுக்கு அழைத்துச்சென்றேன். அவரது ஆயூளை நீடிக்க என்னால் ஆன முயற்சிகளை செய்தேன். அந்த சமயத்தில் எனக்குள் ஒரு உதவியற்ற உணர்வு இருந்தது.” என்றார்.

மேலும், தனது ஆன்மீகப் பயணத்தை பற்றிய அவர், “ இந்தியாவில் பல விதமான மதங்கள் உள்ளன. நான் கிறிஸ்தவ பள்ளியில் படித்த காரணத்தால் எனக்கு கிறிஸ்தவம் பற்றி தெரியும். எனது குடும்பம் இந்து மதத்தை சேர்ந்தது என்பதால், அதன் நெறிமுறைகளையும் நான் அறிவேன். எனது தந்தை மசூதியில் பாடுவார் என்பதால் அந்தமதம் குறித்து நான் அறிவேன். இந்தியாவில் ஆன்மீகம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.” என்றார்

தொடர்ந்து பேசிய அவர், “ நான் ஒரு ஹிந்து. எனது வீட்டில் நான் கோயில் ஒன்றை வைத்துள்ளேன். அங்கு முடிந்தவரை எனது பிரார்த்தனைகளை மேற்கொள்கிறேன். ஆனால் உண்மையில் என்னை விட பெரிய சக்தி இருப்பதை நம்புகிறேன். அதன் மீது நம்பிக்கை வைக்க விரும்புகிறேன்.” என்றார்.

முன்னதாக, கடந்த 2013-ஆம் ஆண்டு பிரியங்கா சோப்ரா தனது தந்தை அசோக் சோப்ராவை இழந்தார். அவருக்கும் அவரது தந்தைக்குமான நெருக்கமான உறவுமுறை குறித்து பல பேட்டிகளில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/vRCSZVvq7VE" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>