சினிமா

அமேசானுடன் ஒப்பந்தம். கேனு ரீவ்ஸுடன் மேட்ரிக்ஸ் 4.. அதிரடி காட்டும் நடிகை பிரியங்கா சோப்ரா

அமேசானுடன் ஒப்பந்தம். கேனு ரீவ்ஸுடன் மேட்ரிக்ஸ் 4.. அதிரடி காட்டும் நடிகை பிரியங்கா சோப்ரா

webteam

கேனு ரீவ்ஸ் நடிக்கும் மேட்ரிக்ஸ் 4 படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

2000-ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றவர் பிரியங்கா சோப்ரா. அதற்குப் பிறகு திரையுலகில் தமிழ் படம் மூலமாக கால்பதித்தார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக தமிழன் திரைப்படத்தில் நடித்தார். பின்னர் அவர், பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கி முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார்.

அதன்பின்னர் ஹாலிவுட் படங்களிலும் மற்றும் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் அங்கு நடிக்கும்போது, அமெரிக்க பாப் பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

இதனிடையே கேனு ரீவ்ஸ் நடிக்கும் லானா இயக்கும் மேட்ரிக்ஸ் 4 படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்கவுள்ளதாகவும் அதற்கான படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக கொரோனா காரணமாக மேட்ரிக்ஸ் 4 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல ஓடிடியான அமேசான் பிரைம் நிறுவனத்துடன் பல லட்சம் டாலர்கள் அளவிலான இரண்டு வருட ஒப்பந்தம் ஒன்றில் இணைந்துள்ளார். இது குறித்து பேசிய பிரியங்கா சோப்ரா, பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை எதிர்பார்க்கிறேன். உலகெங்கிலும் உள்ள படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன். அமேசானுடன் உலக அளவிலான ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால், ஆங்கிலம், இந்தி எந்த மொழியிலும் நான் நடிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.