தனது திருமணத்தை இந்தியா மற்றும் அமெரிக்காவில் பதிவு செய்வதற்காக, திருமண உரிமச் சான்றிதழ் பெறுவதற்கு நடிகை பிரியங்கா சோப்ராவும் அவர் காதலர் நிக் ஜோனாஸும் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழில், விஜய்யின் ’தமிழன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் இந்தியில் நடித்த அவர், அங்கு முன்னணி நடிகையானார். இப்போது ஹாலிவுட் படங்களிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தன்னை விட பத்து வயது குறைந்த ஹாலிவுட் பாப் பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை அவர் காதலித்தார். இவர்களின் நிச்சயதார்த்தம் ஜூலை மாதம் முடிந்துவிட்டது.
நிச்சயதார்த்ததுக்கு லண்டனில் உள்ள பிரபலமான நகைக்கடையில் நிக், 2 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பில் மோதிரம் வாங்கியதாகக் கூறப்பட்டது.
இவர்களது நிச்சயதார்த்த விருந்து மும்பை ஜுஹூவில் உள்ள பிரியங்கா சோப்ராவின் வீட்டில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அங்கு சிறப்பு பூஜையும் நடந்தப்பட்டது.
இந்நிலையில் இவர்கள் திருமணம் ஜோத்பூரில் டிசம்பர் மாதம் நடக்கிறது. கடந்த மாதம் பிரியங்காவும் நிக் ஜோனாஸும் ஜோத்பூர் சென்று திருமணம் செய்துகொள்ள இருக்கும் அரண்மனையை பார்வையிட்டனர்.
இந்நிலையில், திருமணத்துக்கு முன்பாக, அதை அமெரிக்காவில் பதிவு செய்வதற்கான பணிகளில் நிக் ஜோனாஸும் பிரியங்கா சோப்ராவும் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் கலிபோர்னியாவில் உள்ள பெவரிலி ஹில்ஸ் பகுதி நீதிமன்றத்தில் திருமண உரிம சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களை இருவரும் சமர்ப்பித்துள்ளனர். இந்த உரிமச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டு இருவரும் இந்தியா வர இருக்கின்றனர். இதையடுத்து திருமணத்தை இரண்டு நாடுகளிலும் பதிவு செய்வதற்கான முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர்.