சினிமா

அமானுஷ்ய சக்தி பற்றிய கதையில் பிரியாமணி

அமானுஷ்ய சக்தி பற்றிய கதையில் பிரியாமணி

webteam

திருமணத்துக்கு பிறகு அதிக படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை பிரியாமணி, அமானுஷ்ய சக்தி பற்றிய படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார். 

பாரதிராஜாவின் ’கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் பிரியாமணி. பின்னர் பாலுமகேந்திராவின் ’அது ஒரு கனா காலம்’, ’பருத்தி வீரன்’, மலைக்கோட்டை, நினைத்தாலே இனிக்கும் உட்பட பல படங்களில் நடித்தார்.

 ’பருத்தி வீரன்’ படம் அவருக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது. தமிழ் தவிர கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து முன்னணியாக இருந்தார். 

இவருக்கும் மும்பை தொழில் அதிபர் முஸ்தபா ராஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதைத் தொடர்ந்து தனது காதலை அறிவித்த பிரியாமணி, திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகக் கூறினார். அதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்துக்கு பிறகு அதிகமான படங்களில் நடிக்காமல் இருந்த பிரியாமணி, இப்போது தெலுங்கு படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார். ’ஸ்ரீவெண்ணிலா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பிரகாஷ் புலிஜாலா இயக்குகிறார். சாய் தேஜஸ்வானி, பிரபாகர், அஜய் ரத்னம் உட்பட பலர் நடிக்கின்றனர். 

’திருமணத்துக்கு பிறகு கன்னடம், மலையாள படங்களில் நடித்துவிட்டேன். இப்போதுதான்  தெலுங்கு படத்தில் நடிக்கிறேன். தொடர்ந்து நடிக்க, நல்ல கதைகளை கேட்டு வருகிறேன். இந்தப் படம் அமானுஷ்ய சக்திகள் பற்றியது. இதில் பேய், இயற்கைக்கு மாறான சக்திகள் இருப்பது உண்மையா, பொய்யா என்பதை ஆராய்ச்சி செய்யும் பெண்ணாக நடிக்கிறேன். அப்போது என் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்தான் கதை’ என்றார் பிரியாமணி.