அடுத்த ஆண்டு அக்ஷய் குமார் நடிப்பில் தனது புதிய படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க இருப்பதாக இயக்குநர் பிரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுபவர் பிரியதர்ஷன். இவரின் இயக்கத்தில் கடந்த ஆண்டே 'மரக்கையர்' படம் தயாராகிவிட்டது. என்றாலும் கொரோனா காரணமாக இந்த ஆகஸ்டு மாதம்தான் வெளியாக இருக்கிறது. இந்த தாமதத்தால் மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார் பிரியதர்ஷன்.
தற்போது இந்தியில் 'ஹங்கமா 2' படத்தை இயக்கி முடித்து வெளியீட்டுக்கு காத்திருப்பவர், அடுத்த படமாக தனது ஃபேவரைட் ஹீரோவுடன் கூட்டணி சேர இருக்கிறார். 2000-களில் பாலிவுட்டில் பிரியதர்ஷன் - அக்ஷய் குமார் கூட்டணியில் வெளிவந்த "ஹேரா பேரி", "கரம் மசாலா", "பூல் புலையா" போன்ற படங்கள் மெகா ஹிட் அடித்தன.
அப்போது இருந்தே இந்தக் கூட்டணி ஒவ்வொரு முறை சேரும்போதும் எதிர்பார்ப்பு எகிறும். இந்த எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முறை கொடுக்கவிருக்கிறது இந்தக் கூட்டணி. அக்ஷய் குமார் நடித்து வரும் 'ரக்ஷா பந்தன்' படப்பிடிப்புத் தளத்துக்கு சென்று அவரை சந்தித்த பிறகு ப்ரியதர்ஷன் தங்கள் கூட்டணியை உறுதி செய்தார். ஏற்கெனவே இந்தப் படம் உறுதி செய்யப்பட்ட இந்த வருடம் தொடங்கவிருந்ததாக பேசப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பால் படம் கைவிடப்பட்டது எனப் பேசப்பட்டது.
இதையடுத்தே மீண்டும் ஒருமுறை அக்ஷய் குமாரை சந்தித்து அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தங்களின் மெகா ஹிட் காமெடி படங்களின் வரிசையில் இந்தப் படமும் காமெடி படமாக எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார் இயக்குநர் பிரியதர்ஷன்.
எனினும், அடுத்த ஆண்டில் தொடக்கத்தில் தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும், அதற்குள் தாம் ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ள படங்களை முடித்துக் கொடுக்கவும் திட்டமிட்டு இருக்கிறாராம் அக்ஷய் குமார்.
இதற்கிடையே, அக்ஷய் குமாரை சந்தித்த பின் பேசிய இயக்குநர் பிரியதர்ஷன், ``இந்த ஆண்டு நாங்கள் படப்பிடிப்பைத் ஆரம்பிக்க இருந்தோம். ஆனால் கொரோனா காரணமாக அது தாமதமானது. இப்போது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இதுவும் காமெடி ஜார்னரில் எடுக்க இருக்கிறது" என்று கூறி இருக்கிறார்.