ஒரே பாடல் மூலம், ஒரே நாளில் உலகப் புகழ் பெற்றிருக்கிற பிரியா பிரகாஷ், இதை எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
மலையாளத்தில் 'ஒரு அதார் லவ்’ படத்தில் இடம்பெற்றுள்ள 'மாணிக்க மலராயா பூவி' என்ற பாடல், கடந்த 9-ம் தேதி வெளியிடப்பட்டது. இதை இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். சில காட்சிகளே இதில் வந்தாலும் அழகான இமை அசைப்பினால் அனைவரையும் ஈர்த்திருக்கிறார் பிரியா பிரகாஷ் வாரியர்.
ஒரே நாளில் இவர் ட்விட்டர் பக்கத்தை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை சுமார் ஐம்பதாயிரத்தை கடந்திருக்கிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டியிருக்கிறது.
திருச்சூர், விமலா கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்துவரும் பிரியா, தனக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்து கூறும்போது, ‘ஒரே நாளில் இப்படி பிரபலமாவேன் என நினைத்துப் பார்க்கவில்லை. இந்த பாடல் வெளியான பின் கல்லூரிக்குச் சென்றேன். எனது பேராசிரியர்களும் நண்பர்களும் என்னை விட அதிக சந்தோஷத்தில் இருந்தார்கள். தாங்கள் அதிகம் பெருமைப்படுவதாகச் சொன்னார்கள். நான் அகமகிழ்ந்து போனேன்.
காதலை பற்றி என்னிடம் கேட்கிறார்கள். அந்த பாடலில், பள்ளிப் பருவ ஈர்ப்பைச் சொல்லியிருக்கிறோம். அந்தக் காட்சியில் வரும் கண்களின் பேச்சும் நளினமும் இனிமையானது. இந்த நவீன காலத்திலும், காதல் ஒரு மாய உணர்வாகத்தான் இருக்கிறது. அதை யாரும் தவிர்க்க முடியாது. உண்மையான காதலை நான் நம்புகிறேன். ஒவ்வொரு தலைமுறையிலும் அது இருக்கும்’ என்கிறார் பிரியா.