சினிமா

மகளின் ஒன்லைன் கொடுத்த ஊக்கம்... - மீண்டும் இயக்குநர் ஆகிறார் பிரித்விராஜ்

PT WEB

மீண்டும் இயக்குநராக திரும்பவுள்ளதாக அறிவித்துள்ளார் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் பிரித்விராஜ்.

மலையாள நடிகர் பிரித்விராஜ் சினிமாவில் நடிகராகும் முன்பு, இணை இயக்குநராக பணிபுரிந்தவர். அந்த வகையில் ஓர் இயக்குநராக தனது முதல் படத்தை மோகன்லாலை வைத்து மாஸ் படமாக 'லூசிபர்' படத்தை இயக்கினார். மலையாள சினிமாவின் எந்தவொரு இயக்குநரும் செய்யாத சாதனையை இவரின் முதல் படமே ரூ.200 கோடி வசூலித்து அசத்தியது.

இந்தக் கதையின் வெற்றியின் காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி போன்றோர் பிரித்விராஜை படம் இயக்க அழைப்பு விடுத்தனர். ஆனால், மீண்டும் நடிப்பின் பக்கம் திரும்பினார். இடையில் 'லூசிபர்' படத்தின் அடுத்த பாகமாக 'எம்பூரான்' படத்தின் பூஜை போடப்பட்டாலும், அந்தப் படம் அப்படியே நின்றுவிட்டது.

இதற்கிடையேதான் நேற்று பிரித்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், அவரின் மகள் சிலேட்டில் எழுதிய ஒன்லைன் கதையை பகிர்ந்தார். இந்தக் கதை 2-ஆம் உலகப் போரின் பின்னணியில் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தந்தை-மகன் இரட்டையரைப் பற்றியது. இந்த சிலேட்டின் படத்தை பகிர்ந்து, ``இந்த லாக்டவுனில் நான் கேட்ட சிறந்த ஒன்லைன் கதை இது. ஆனால் ஒரு பெருந்தொற்றுநோய்க்கு மத்தியில் இதைப் படமாக்குவது சாத்தியமற்றது என்று தோன்றியதால், நான் மற்றொரு ஸ்கிரிப்டைத் தேர்ந்தெடுத்தேன். ஆம், மீண்டும் கேமராவுக்குப் பின்னால் செல்ல இருக்கிறேன். விவரங்கள் விரைவில் வெளியாகும்" என்று தனது அடுத்தப் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதற்கிடையே, பிரித்விராஜ் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. அவரின் நடிப்பில் உருவாகியுள்ள கோல்ட் கேஸ் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் சமீபத்தில் அறிவித்தார். இதேபோல், 'குருதி' மற்றும் 'பிரம்மம்' போன்ற படங்களும் அடுத்தடுத்து ஓடிடி தளத்தில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.