சினிமா

”கலகக்காரன்” - கே.ஜி.எப் காட்சிகளால் இன்றும் மனதில் நிற்கும் இயக்குநர் பிரசாந்த் நீல்

”கலகக்காரன்” - கே.ஜி.எப் காட்சிகளால் இன்றும் மனதில் நிற்கும் இயக்குநர் பிரசாந்த் நீல்

webteam

2014 ஆம் ஆண்டு கன்னடத்திரையுலத்திற்கு ‘உக்ராம்' (Ugramm) என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் அந்த இயக்குநர். ஒல்லியான தேகம்.. சாக்லேட் பாய் லுக். ஆனால் இந்திய திரையுலத்திற்கு அப்போது தெரியாது. இவர் தனது அடுத்தப்படத்தில் ஒட்டுமொத்த இந்தியாவை தன் பக்கம் திருப்பபோகிறார் என்று. அந்தப்படத்தின் பெயர் கே.ஜி.எப். அந்தப்படத்தை இயக்கியவர் பிரஷாந்த் நீல்... அதன் பின்னர் நடந்தது அனைத்துமே வரலாறு.

ஆள் உயர வில்லன்கள்.... உச்சபட்ச பிரம்மாண்டம்.. மிரட்டும் சண்டைக்காட்சிகள்... புல்லரிக்கும் வசனங்கள்.. என ரத்தம் தெறிக்க தெறிக்க கே.ஜி.எப் திரையரங்குகளில் திருவிழா நடத்தியது.

சாவின் விழிம்பின் தாய் இருக்கிறாள்.. காப்பாற்ற முடியாத விரக்தியின் உச்சத்தில் தாய் அருகில் வந்து அமர்கிறான் அந்தச் சிறுவன்... “நீ எப்படி வாழப் போறியோனு எனக்குத் தெரியாது.. ஆனா சாகும் போது இந்த உலகமே மதிக்கிற பெரிய பணக்காரணாகத்தான் சாக வேண்டும்” என்று மகனிடம் சத்தியம் வாங்குகிறாள் தாய்... அம்மாவின் சத்தியத்தை நிறைவேற்ற நாயகன் எடுத்துக்கொண்ட பாதை.. பூப்பாதையல்ல.. சிங்கப்பாதை... அதிகாரத்திற்கான தேடலில் நாயகனின் மனதில் நங்கூரமிட்ட “பவர் புல் பீப்புள் கம் ஃப்ரொம்  பவர் புல் பிளேசஸ்” என்ற வசனம் மக்கள் மனதிலும் நங்கூரமிட்டது.

அதிகாரத்திற்காக எந்த எல்லை வரைக்கும் செல்ல துணிந்த சிறுவனின், பிஞ்சு கைகள் முதலில் இரத்தம் பார்த்தது ஒரு மும்பை காவலரின் மொட்டைத்தலையை.

அந்தத் தருணத்தில் தான் ‘ராக்கி’ எனும் அசுரன் உருவானான். இரத்தம் சொட்ட சொட்ட மும்பை தாதாவிடம் நின்று கொண்டிருந்த போது “ அவனிடம் உனக்கு என்னதான் வேணும் என்று கேட்க சிறுவன் சொன்னது “ இந்த உலகம்”. வார்த்தைகளின் மூலம் அன்று அவன் வெளிப்படுத்தியது பேராசை அல்ல... பசி... படத்தின் முதல் சண்டைக்காட்சி. சண்டைக்காட்சி வர போகிறது என்பது தெரியும். ஆனால் இப்படி ஒரு சண்டைக்காட்சி வரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.. ராக்கி அடித்த ஒவ்வொரு அடியிலும் திரையோடு சேர்த்து திரையரங்கில் அமர்ந்திருந்த ரசிகர்களின்  நெஞ்சமும் அதிர்ந்தது. 

ராக்கியின் அசுர வளர்ச்சியை பொருக்காத வில்லன்.. அவனை ஏளனமாக பேசும் தருவாயில் ஒட்டு மொத்த மும்பையை கைகளில் தர வருகிறான் மற்றொரு வில்லன். அந்தக் காட்சியில் ராக்கி பேசும் “நான் பத்துபேர அடிச்சு டான் ஆனவன் இல்லடா.. நான் அடிச்ச பத்து பேரும் டான்தான்” என்ற வசனம் இளசுகளின் ஆதர்சன வசனமாக மாறி போனது.

கதாநாயகியுடனான முட்டல் மோதலுடன், கருடனுக்கு ஸ்கெட்ச் போடும் ராக்கியின் கார் ஒரு சாலையில் நிற்கிறது. தாய் ஒருத்தி கைக்குழந்தையுடன் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் சாலையில், தவறவிட்ட பன்னை எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்க, துப்பாக்கி முனையில் அனைத்து வாகனங்களையும் நிறுத்தும் ராக்கியின் மாஸூக்கு திரையரங்கில் எகிடுதகிடு அப்ளாஸ்...

அந்த காட்சியில் ராக்கி, தாயை பார்த்து “ இங்க எவனும் உன்ன விட பல சாலி இல்ல, உலத்துல தாயை விட பெரிய சக்தி எதுமில்ல”என்று கூறும் போது ராக்கியின் சிறு வயது நினைவுகளை காட்சி மொழியில் கடத்தியிருப்பார் கேமராமேன் புவன் கவுடா.

தனது பெயரை இந்த ஊர் அறிய வேண்டும் என நினைத்த ராக்கியின் கனவு, எந்தளவுக்கு வீரியம் மிக்கது என்பது அந்த போலீஸ் ஸ்டேசன் காட்சி நமக்கு சொல்லியிருக்கும்... ராக்கியை யாரென்று தெரியாத ஒரு போலீஸ் அவனை சீண்ட .. ராக்கியின் பிராண்டை ஸ்டேசன் அதிர அதிர சொல்லியிருப்பார் இயக்குநர்.

தங்கச்சுரத்தை குறிவைத்து இன்டர்வல் பிளாக்கில் கருடனை வேண்டுமென்றே தவறவிடும் ராக்கி “இருகின இதயத்தில் பயத்தினை கருவறுத்து” என பின்னணியில் பிளிறும் வசனங்களில் தங்கச்சுரங்கத்திற்குள் நுழைவான்... படத்தின் முதல் பாதியிலிருந்து அப்படியே வேறு ஒரு அதளபாதளம் இராண்டாம் பாதி...

விடுதலைக்காக ஏங்கி நிற்கும் அடிமைகள்... கருடனை கொல்ல சரியான சந்தர்ப்பம் எதிர்நோக்கி காத்திருக்கும் ராக்கி என இருவேறு பாதையில் செல்லும் கதைக்களத்தை, ஒற்றை புள்ளியில் கொண்டு வர இராண்டாம் பாதியில் காட்சிகளை செதில் செதில் செதிலாக செதுக்கியிருப்பார் இயக்குநர் பிரசாந்த் நீல்.

அதன் ஆரம்பப்புள்ளி, வெள்ளைக் கோட்டைத்தாண்டி பந்தை எடுக்கச் சென்ற மகனையும், அவனை காப்பாற்றச் செல்லும் தாயையும் வில்லன் சுட்டுக்கொல்லும் அந்தக்காட்சி. பெண் குழந்தை வேண்டிய கர்ப்பிணியை, வலுகட்டாயமாக ஆண் குழந்தையை வேண்ட வைக்கும் விரக்தியான சூழ்நிலை, ராக்கியை காப்பற்ற தனது உயிரை விடும் அந்த பெண்ணின் கணவர், தாய்க்கு பிறக்கும் பெண் குழந்தையை ,அடிமை ஒருவர் ராக்கியின் கைகளில் கொண்டு சேர்ப்பது என ராக்கிக்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் ராக்கியை அடிமைகளை மீட்க சொன்னாலும் அவன் மனம் அப்போது வரை இறங்க வில்லை.

ஆனால் அந்த ஒட்டு மொத்த கோபத்தையும், கூட்டத்தில் கண்பார்வையற்ற முதியவரை  கொண்டு செல்லும் வில்லன்களை துவம்சம் செய்யும் ராக்கியின் சண்டைக்காட்சி வெளிப்படுத்திருக்கும். இறைவனுக்கு நரபலி கொடுக்க வைத்து மூன்றாவது  கைதியாக இருந்து கருடனை கருவருக்கும் காட்சியில் மொத்த அடிமைகளையும் தன்பக்கம் திருப்பியிருப்பான் ராக்கி..”

விறுவிறு திரைக்கதை.. கவிதை பாணியில் காட்சிகள்.. ரசிகனை சீட்டின் நுனியில் அமரவைக்கும் காட்சிகள் என ஒரே படத்தில் உச்சம் தொட்ட பிரசாந்த் நீல், ராக்கியை போன்றே கே.ஜி.எப் 2, சலார் என அடுத்தடுத்த அத்தியாயங்களை படைக்க காத்திருக்கிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

-கல்யாணி பாண்டியன்