சினிமா

தனுஷ் ‘டி43’ படத்தில் இணையும் பிரசன்னா ?

தனுஷ் ‘டி43’ படத்தில் இணையும் பிரசன்னா ?

webteam

தனுஷின் ‘டி43’ படத்தில் நடிகர் பிரசன்னா இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படம் தனுஷின் 43-ஆவது திரைப்படமாகும். தற்போது மாரி செல்வராஜ் இயக்கி வரும் ‘கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் பங்கேற்று நடித்து வருகிறார். அதனை அடுத்து அவர் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ள ‘டி43’ படத்தில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. இதற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார்.

இதனிடையே ‘டி43’ படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து முக்கியமான வேடத்தில் நடிகர் பிரசன்னா நடிக்க இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பை வரும் அக்டோபர் மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

இயக்குநர் கார்த்திக் நரேன் தற்போது அருண் விஜய்யை வைத்து ‘மாஃபியா’ படத்தை எடுத்து முடித்துள்ளார். அந்தப் படம் வரும் 21-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர். இதனை லைகா புரொடக்‌ஷன் தயாரித்துள்ளது. கார்த்திக் நரேன் இதற்கு அடுத்து தனுஷூடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே கார்த்திக் நரேன் இயக்கும் படம் ஒன்றில் தனுஷூடன் இணைய இருப்பதாக நடிகர் பிரசன்னா ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதனை இயக்குநர் தரப்பு மறுக்கவில்லை. அதேசமயம் உறுதிப்படுத்தவும் இல்லை.

இதற்கு முன் தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘பா பாண்டி’ படத்தில் ஏற்கெனவே பிரசன்னா நடித்திருந்தார். வெகுகால இடைவெளிக்குப் பிறகு சிநேகா, சமீபத்தில் வெளியான தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்திருந்தார். ஆகவே இந்தக் கூட்டணி ஏற்கெனவே ரசிகர்கள் மனதில் பதிவானதுதான். எனவே ‘டி43’ படத்தில் பிரசன்னா பங்கேற்பது தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.