ஹெச்.வினோத்துடன் இரண்டாவது முறையாக நடிகர் அஜித் இணையும் படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இப்படத்தையும் ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூரே தயாரிக்கிறார். வலிமைப்படத்தின் பூஜை கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற நிலையில் முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்து, அடுத்தகட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் அஜித் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இவருக்கு ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ், இலியானா ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்டு வந்தது. அத்துடன், அஜித்துக்கு வில்லனாக நடிகர் பிரசன்னா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது நெட்டிசன்கள் பலரும் டுவிட்டரில் பிரசன்னாவிடம் அஜித்துடன் நடிக்கீறீர்களா என கேள்விகளாக கேட்க தொடங்கினர்.
இதற்கு ட்விட்டரில் பதிலளித்த பிரசன்னா, “ பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான். ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதியாக நிலையில் தானும் உங்களை போன்று ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருந்தார். இந்த செய்தியை பார்த்த அஜித் ரசிகர்கள் நிச்சயம் அஜித்துக்கு வில்லனாக பிரசன்னா நடிப்பார் என ட்விட்டரில் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்நிலையில், அஜித்தின் வலிமை படத்தில் தான் நடிக்க வில்லை என்பதை பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தற்போது தெரிவித்துள்ளார். இது குறித்து பிரசன்னா தனது டிவிட்டர் கணக்கில் கூறும் போது, “தான் வலிமைப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்று வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. பேச்சுவார்த்தை நடந்து முடிந்த பின்பு நானும் உங்களைப் போலவே, எனது சினிமா வாழ்கையில் மிகப் பெரிய அறிவிப்பாக இந்த செய்தி வெளியாகும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் துரதிருஷ்ட விதமாக ‘தல’யுடன் நடிக்கும் வாய்ப்பு இம்முறை நடக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
மேலும், “இதில், தனக்கு ஆழ்ந்த வருத்தங்கள் இருந்த போதும், உங்களது அன்பினால் நான் இன்று உறுதியாக இருக்கிறேன். இம்முறை இந்த வாய்ப்பு கைநழுவி சென்றாலும் அஜித்துக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்ற தனது கனவு அடுத்த முறை நிச்சயம் நிறைவேறும்” என்று பிரசன்னா உருக்கமாக கூறியுள்ளார்.