55வது கேரள மாநில திரைப்பட விருது அறிவிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. கேரள மீன்வளம் கலாசாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் திருச்சூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் 55வது கேரள மாநில திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்களை அறிவித்தார். மூத்த நடிகர் பிரகாஷ் ராஜ் தலைமையிலான ஏழு பேர் கொண்ட நடுவர் குழு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தது.
இதில் பேசிய நடிகர் மற்றும் நடுவர் குழு தலைவர் பிரகாஷ்ராஜ் "இந்த ஆண்டு நடுவர் குழு சிறந்த குழந்தைகள் படம் மற்றும் குழந்தை நட்சத்திரங்களுக்கான விருது யாருக்கு என தேர்ந்தெடுக்கவில்லை. ஏனெனில் குழந்தைகள் படத்தையோ, குழந்தைகள் படத்தை எடுக்க வேண்டும் என்ற முயற்சியை கூட நாங்கள் பார்க்கவில்லை. மிகுந்த மரியாதையுடன் திரைத்துறைக்கு எங்கள் வேண்டுகோள் என்னவென்றால், குழந்தைகள் படம் உருவாக்குவது பற்றி சிந்தியுங்கள். திரையுலகமும், இயக்குநர்களும், எழுத்தாளர்களும் ஒன்றை உணர வேண்டும். இந்த சமூகம் முதியவர்கள், இளைஞர்களுக்கானது மட்டுமல்ல. குழந்தைங்களும் இந்த சமூகத்தின் அங்கமே. குழந்தைங்கள் என்ன யோசிப்பார்கள், புரிந்து கொள்வார்கள், அவர்களின் உலகம் என்ன என்பதும் சினிமாவாக்கப்பட வேண்டும். சில குழந்தைகளை சினிமாவில் நடிக்க வைப்பதன் மூலமோ, ஹீரோயின் அம்மா என்பதாலோ, ஹீரோ அப்பா என்பதாலோ அது குழந்தைகள் சினிமா ஆகிவிடாது. அது அறவே குழந்தைகள் சினிமா அல்ல. இந்த சமூகத்தில் குழந்தைகள் என்ன சிந்திக்கிறார்கள் என நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எந்தப் படமும் குழந்தைகளின் பார்வை பற்றி பேசவில்லை. குழந்தை நட்சத்திரங்கள் யாரும் அவர்கள் வயதுக்கு ஏற்பவும் காட்டப்படவில்லை. அவர்கள் வெறுமனே உபகரணங்கள் போல் பயன்படுத்தப்பட்டுள்ளனர். பெண்கள் பற்றிய படங்கள் ஏன் வருவதில்லை என போராடினோம். அது நடக்க பெரிய காலம் தேவைப்பட்டது. இப்போது குழந்தைகள் பற்றி புரிந்து கொள்ளவும், அவர்கள் உலகத்தை அறிவது முக்கியம் என நாம் உணர வேண்டும். இந்த நடுவர் குழு திரையுலகத்திடம், குழந்தைகளுக்கான படம் மற்றும் அவர்களுக்கான வேடங்களை எழுதும்படி அழுத்தமாக கேரிக்கை வைக்கிறது.
அடுத்தது, இம்முறை 128 படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. ஒரு நடுவர் குழு தலைவராக நேர்மையாக படங்களின் தரம் பற்றி சொல்வதென்றால், அதுல வெறும் 10 சதவீத படமே தரமாக இருந்தன. பெரிய நடிகர்கள் மற்ற மொழி PAN INDIAN சினிமாக்களில் பணியாற்றுவதால் இது நடக்கிறதா? என நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் வளர்ந்த இடத்தை ஆரோக்யமாக வைத்திருப்பதில், கவனம் செலுத்த வேண்டும் என நான் நினைக்கிறேன். இனி வரும் ஆண்டுகளில் மலையாளம் சினிமா இன்னும் நிறைய படங்களை தரும் எனவும், பார்வையாளர்களுக்கு நிறைய அற்புதமான படங்கள் கிடைக்க வேண்டும் எனவும் விரும்புகிறேன். 
மூன்றாவது, இதை சென்ற முறையும் நடுவர் குழு தலைவர் கூறி இருப்பார் எனவே நினைக்கிறேன். அரசாங்கம் சினிமாக்களுக்கு ஆதரவு தருவது சிறப்பான விஷயம். அரசு இதனை வியாபாரமாக மட்டும் பார்க்கவில்லை. சில படங்களை அவர்கள் தயாரிப்பது ஊக்கமளிக்கிறது. ஆனால் நடுவர் குழுவின் வேண்டுகோள் என்னவென்றால், இது மக்களின் வரிப்பணம். அதை நல்ல படங்கள் எடுப்பதை ஊக்கப்படுத்த செலவழிக்கிறீர்கள். எனவே அதற்கென ஒரு குழுவை உருவாக்கி, படங்களின் தரத்தில் மிகுந்த கவனம் செலுத்துங்கள். 
மஞ்ஞுமல் பாய்ஸ் படத்திற்கு அதிக விருதுகள் கொடுத்தது பற்றி கேட்கப்பட "படத்தின் 24 துறைகளும் இயக்குநரோடு ஒத்திசைய வேண்டும். மஞ்ஞுமல் பாய்ஸ் கதையை சொல்வதற்கு மிகவும் சவாலானது. அவர்களுக்கு இதற்கு முன்பும் நிறைய விருதுகள் கிடைத்துவிட்டது என்பதால், நாமும் கொடுக்க வேண்டுமா என்ற சந்தேகம் எங்களுக்கு இல்லை. அவர்கள் அவ்விருதுகளுக்கு தகுதியானவர்கள் என நடுவர் குழு நம்பியது." என்றார்.
மம்மூட்டி பல இளம் நடிகர்களோடு போட்டி போட்டிருக்கிறாரே எனக் கேட்கப்பட "ஆம். ஆனால் நாங்கள் அவரை சீனியர் என்றோ, இளம் நடிகர்களை ஜூனியர் என்றோ பார்க்கவில்லை. பிரமயுகம் படத்தில் மம்மூட்டியின் இருப்பும், அவரது நுணுக்கமான நடிப்பும் மிக அழுத்தமாக இருந்தது. இருந்தாலும் டொவினோ, ஆசிஃப் அலி போன்ற நடிகர்கள் பலரும் சிறப்பாக நடிக்கிறார்கள் என்பதை கவனிக்க முடிந்தது. ஆனாலும் மம்மூட்டி அவருடைய இருப்பினாலேயே ஏற்படுத்தும் அதிர்வு அலாதியானது. எனக்கு அவரைப் பார்த்து பொறாமையாக இருக்கிறது. அவருக்கு நடிப்பின் மீது இருக்கும் ஆளுமையை இன்றைய இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.
தேசிய விருதுகளில் மம்மூட்டி தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறாரே? எனக் கேட்கப்பட "தேசிய விருதுகளில் சமரசம் இருக்கிறது என சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. கேரளா விருதுகளில் என்னை நடுவராக அளித்ததில் எனக்கு பெரிய மகிழ்ச்சி. ஏனென்றால் அவர்கள் அழைத்த போதே 'எங்களுக்கு அனுபவம் வாய்த்த அதே சமயம் வெளிய நபர் தேவை. உங்களின் முடிவே இறுதி எனவும் கூறினார்கள். இது தேசிய விருதுகளில் நடப்பதில்லை. இது FILESகள் நிறைய விருதுகள் வாங்குவதை பார்க்குப் போதே இது கண்கூடாகிறது. இம்மாதிரி நடுவர் குழுவும், தேசிய அரசும் மம்மூட்டியை பெற தகுதியற்றவர்கள்" என்றார்.