Diwali Release Dude, K Ramp
சினிமா

பிரதீப் தெலுங்கில் ஹிட்... எங்களுக்கு தமிழில் வரவேற்பு இல்லை! - கிரண் அப்பாவரம் | Dude | K Ramp

தெலுங்கு மக்கள் மற்ற மொழிப் படங்களை நன்றாக வரவேற்பார்கள். லோகா போன்ற படம் இங்கு ஹவுஸ்ஃபுல்லாக ஓடியது. தெலுங்கிலும் இளம் நடிகர்கள் நல்ல படங்கள் கொடுக்கிறார்கள். ஆனால் எங்கள் படங்கள் மற்ற மாநிலங்களில் வரவேற்பு பெறுவதில்லை.

Johnson

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் கிரண் அப்பாவரம். `ராஜாவாரு ராணிகாரு' படம் மூலம் அறிமுகமானவர், பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். சென்ற ஆண்டு வெளியான இவரது `KA' படம் மிகப்பெரிய ஹிட்டானது. தற்போது இவரின் புதிய படமான K-Ramp, அக்டோபர் 18ம் தேதி வெளியாகவுள்ளது. இது சம்பந்தமாக அளித்த பேட்டி ஒன்றில், இளம் நடிகர்களின் தெலுங்கு படங்களுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு கிடைப்பதில்லை. ஆனால் தமிழ் படங்களை தெலுங்கு மாநிலங்களில் கொண்டாடுகிறார்கள் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில் கிரண் அப்பாவரம் "KA படத்தை தமிழில் டப் செய்து தமிழ்நாட்டில் வெளியிட தீவிரமாக முயற்சித்தேன். ஆனால் எனக்கு ஒரு ஸ்க்ரீன் கூட கிடைக்கவில்லை. எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அப்போது அவர்கள் `பண்டிகை சமயத்தில் மற்ற ஹீரோக்கள் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது' என வெளிப்படையாகவே சொன்னார்கள். அது தீபாவளி சமயம், கா ஒரு சிறந்த படம் என்பதை நான் நம்பியதால், தமிழிலும் வெளியிடலாம் என முயன்றேன். ஆனால் அதற்கு ஸ்க்ரீன் கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் தெலுங்கு பதிப்பை வெளியிடவும் சென்னையில் ஸ்க்ரீன் கிடைக்கவில்லை. ஒரு வாரம் கழித்து தான் வெளியிட முடிந்தது, அதுவும் வெறும் 10 ஸ்க்ரீன்களே கிடைத்தன.

அப்படத்திற்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்து ஓடியது, ஆனால் சென்னையில் அப்படத்தை பார்க்க விரும்பியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற போது, எனக்கு வருத்தமாக இருந்தது. நான் ஒரு இளம் நடிகராக இருந்தாலும், என்னுடைய படங்களை தமிழிலும் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஏனென்றால் நாங்கள் எல்லா தமிழ் ஹீரோக்களின் படங்களையும் பார்க்கிறோம். தெலுங்கு மக்கள் மற்ற மொழிப் படங்களை நன்றாக வரவேற்பார்கள். லோகா போன்ற படம் இங்கு ஹவுஸ்ஃபுல்லாக ஓடியது. தெலுங்கிலும் இளம் நடிகர்கள் நல்ல படங்கள் கொடுக்கிறார்கள். ஆனால் எங்கள் படங்கள் மற்ற மாநிலங்களில் வரவேற்பு பெறுவதில்லை.

Kiran Abbavaram

தெலுங்கு மார்க்கெட்டில் மிகுந்த வரவேற்பு பெரும், 10 தமிழ் ஹீரோக்கள் உள்ளனர். அதுவே தெலுங்கு இளம் ஹீரோக்களுக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான். இப்போது பிரதீப் ரங்கநாதன் படம் தெலுங்கில் வெளியாகிறது. அதே போல என்னுடைய K Ramp படத்தை தமிழில் வெளியிட விரும்பினாலும் எனக்கு ஸ்க்ரீன் கிடைக்காது, அது எனக்கு தெரியும். இதைப் பற்றி பேசத் துவங்கினால், வியாபாரம், நட்சத்திர அந்தஸ்து எனப் பல விஷயங்கள் வரும். இறுதியில் இது ஒரு வியாபாரம் தான்.

என்னுடைய வேண்டுகோள் ஒன்றுதான், எங்கள் ஊரில் தமிழ் நடிகர்கள் விரும்பப்படுவது போல, தமிழ்நாட்டில் நாங்களும் விரும்பப் பட வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை. ஆனால் ஒருமுறை தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால் கொண்டாடுவார்கள் என்பது மட்டும் தெரியும். என்னுடைய அடுத்த படம் `சென்னை லவ் ஸ்டோரி'யின் கதைக்களம் சென்னை தான். எனவே அதனை தமிழ்நாட்டில் முறையாக வெளியிடுவேன். வரவேற்பை பெரும் எனவும் நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.