சினிமா

பிசியோதெரப்பிஸ்ட்டை திருமணம் செய்த பிரபுதேவா; உறுதிப்படுத்திய ராஜுசுந்தரம்!

sharpana

நடிகர் பிரபுதேவாவுக்கும் பீகாரைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட்டுக்கும் திருமணம் ஆனதாக தகவல் வெளியானதை, அவரது சகோதரர் ராஜு சுந்தரம் உறுதிப்படுத்தியுள்ளார்.

 ’இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்’ என்று அழைக்கப்படும் பிரபுதேவா ஷங்கரின் ’ஜென்டில்மேன்’ படத்தில் ’சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு’ பாடல் மூலம் புகழ்பெற்றார். மின்சாரக் கனவு படத்தில் இடம்பெறும் ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார்.

இந்தியாவின் நம்பர் 1 நடன இயக்குநர், நடிகர், இயக்குநர்  என்ற பல பெருமைகளுக்கு உரிய பிரபுதேவா ’இந்து’ படத்தின் மூலம்தான் நடிகராக அறிமுகமானார். 1994 ஆம் ஆண்டு வெளியான ஷங்கரின் ’காதலன்’ அவரை முன்னணி நடிகராக்கியது.  விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு படங்களை இயக்கியதோடு தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, இந்தியிலும் சல்மான்கான், அக்‌ஷய்  குமார் ஆகியோரை இயக்கி முன்னணி இயக்குநராக உள்ளார். சமீபத்தில்தான் இவர் நடனம் அமைத்த ’மாரி 2’ படத்தின் ரெளடி பேபி பாடல் தென்னிந்தியாவின் பில்லியன் பார்வையாளர்களைக் கடந்த முதல் பாடல் என்ற பெருமையைப் பெற்றது.

கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் மனைவியான ரமலதாவை திருமணம் செய்துகொண்டார் பிரபுதேவா. இத்தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில், ஒரு மகன் கடந்த 2008இல் புற்றுநோயால் இறந்துவிட்டார்.

 வில்லு படத்தை இயக்கியபோது பிரபுதேவா நயன்தாரவுடன் காதலில் விழுந்தார். அதனை எதிர்த்து அவரது மனைவி ரமலதா போராட்டம் செய்வதாக அறிவித்தார். பெண்கள் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு ரமலதாவும் பிரபுதேவாவும் விவாகரத்து பெற்றனர். கடந்த 2012 ஆம் ஆண்டு நயன்தாரா பிரபுதேவாவை விட்டுப் பிரிந்தார். பிரபுதேவா, நயன்தாரா காதல்;முறிவை தென்னிந்திய திரைத்துறையே உற்றுநோக்கியது. நயன்தாராவோடு பிரபுதேவாவுக்கும் எதிர்ப்புகள் கிளம்பின என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, சல்மான்கானை வைத்து ’ராதே’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில்தான், நடிகர் பிரபுதேவாவுக்கும் பீகாரைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ஹிமானிக்கும் திருமணம் ஆனதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. அடிக்கடி நடனமாடுவதால் முதுகு மற்றும் கால் வலியால் அவதியுற்ற பிரபுதேவாவுக்கு ஹிமானி பிசியோதெரபி சிகிச்சை அளித்துள்ளார். அப்போது, இருவருக்கும் காதல் எற்பட்டு கொரோனா ஊரடங்கின்போது, கடந்த மே மாதம் பிரபுதேவாவின் சென்னை வீட்டில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். ஊரடங்கின் காரணமாக யாரும் கலந்துகொள்ளவில்லை. தற்போது, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் ஹிமானி வசித்து வருகிறார். அவரை அழைத்துக்கொண்டு பெங்களூரில் உள்ள அம்மாவை சந்திக்க இரண்டுமுறை சென்றுள்ளார் பிரபுதேவா.

கடந்த ஒரு வாரமாகவே இவர்களின் திருமணம் கிசுகிசுப்புகளாக வெளியானதைத் தொடர்ந்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் பிரபுதேவாவின் அண்ணன் ராஜு சுந்தரத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, “பிரபு தேவாவுக்கு திருமணம் ஆனது உண்மைதான். இந்தத் திருமணத்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று பூரிப்புடன் குறிப்பிட்டுள்ளார்.