பிரபாஸ் நடிக்கும் 'சாஹோ' படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் நடிப்பது உறுதியாகியுள்ளது.
பாகுபலி-2 திரைப்படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் இப்படத்தில் நடிக்க பர்ணீதி சோப்ரா, காத்ரினா கைஃப் போன்ற பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில், பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடிப்பதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.
பாலிவுட் படங்களில் நடிக்க இதுவரை 4 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று வந்த ஸ்ரத்தா கபூர் இப்படத்தில் நடிக்க 6 கோடி ரூபாயை சம்பளமாக கேட்டுள்ளார். இதனிடையே தீபிகா படுகோனேவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவரிடம் தேதிகள் இல்லாததாலும், ஸ்ரத்தா தென்னிந்தியாவில் கணிசமான ரசிகர்களை கொண்டிருப்பதாலும் அவர் கேட்ட சம்பளத்தை தர முன் வந்ததாகவும் தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வருகிறது.
சாஹோ திரைப்படம் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது. சுஜீத் இயக்கும் இந்தப்படத்தில் நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்க இருக்கிறார். அருண் விஜயும் நடிக்க இருக்கிறார். 2018 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் சாஹோ அடுத்த ஆண்டின் மிகப்பெரிய படமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.