சினிமா

வெளியானது பாகுபலி பிரபாஸின் "சாஹோ" டீஸர்

’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ படங்களுக்காக 5 வருடங்களை செலவழித்த பிரபாஸ், அடுத்து நடிக்கும் படம், ’சாஹோ’. பிரமாண்ட ஆக்‌ஷன் படமான இதில் அவர் ஜோடியாக இந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் வில்லன்களாக நடிக்கின்றனர். மற்றும் மந்திரா பேடி, ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிக்கின்றனர். மதி ஒளிப்பதிவு செய்கிறார். ஷங்கர் -எஹசான் -லாய் இசை அமைக்கின்றனர். பின்னணி இசையை ஜிப்ரான் அமைத்துள்ளார்.

சுஜித் இயக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழிகளில் மெகா பட்ஜெட்டில் உருவாகிறது. ’டை ஹார்ட்’, ’டிரான்ஸ்பார்மர்ஸ்’ உட்பட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ள கென்னி பேட்ஸ், இதன் சண்டை காட்சிகளை அமைத்துள்ளார். படத்தில் இடம்பெறும் முக்கிய சண்டைக்காட்சியை அபுதாபியில் 60 நாட்களாக படமாக்கியுள்ளனர். இந்திய சினிமாவில் இதுவரை இடம்பெறாத வகையில் இந்த சண்டைக் காட்சி இருக்கும் என்று படக்குழு கூறியுள்ளது.

இந்நிலையில் பிரபாஸின் 39 பிறந்த நாளின் போது ’சாஹோ’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. ’ஷேட்ஸ் ஆஃப் சாஹோ’ என்று பெயரிடப்பட்ட அந்த விடீயோ ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது, ஜப்பானிய ரசிகர்களையும் அது கவர்ந்தது.

பிரபாஸ் நடித்த பாகுபலி உள்ளிட்ட படங்கள் ஜப்பானிலும் வரவேற்பை பெற்றுள்ளதால், ஜப்பானிலும் சாஹோ வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய சுதந்திர தினம் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  "சாஹோ" படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டது. அதிரிபுதிரி ஆக்ஷன் காட்சிகள் கொண்ட டீஸர், படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.