சினிமா

"இந்த உலகை மாற்றும் பெரிய சக்தி... அன்பு!" - அறக்கட்டளை ஆரம்பித்த பூஜா ஹெக்டே

நிவேதா ஜெகராஜா

"மக்கள் எனக்கு அளிக்கும் பணத்தை எதாவது ஒரு வழியில் மக்களுக்கு திருப்பித் தர வேண்டும் என்று உணர்ந்தேன்" என்று அறக்கட்டளை ஆரம்பித்ததன் பின்னணியை விவரித்திருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.

நடிகர் விஜய்யின் 65ஆவது படமான `பீஸ்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் 'முகமூடி' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக தெலுங்கில் நடித்து வருகிறார். 'அல வைகுந்தபுரம்மலு' உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தவருக்கு தற்போது பிரபாஸ் உடன் 'ராதே ஷ்யாம்' படத்தி நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கை தாண்டியும் தற்போது பூஜாவுக்கு வரவேற்பு இருக்கிறது. சல்மான் கானுடன் ஒரு படம், ரன்வீர் சிங் உடன் ஒரு படம் என கமிட் ஆகி இருக்கிறார். இதனால் பிசியாக இருந்து வருகிறார் பூஜா.

இதனிடையே, மக்கள் பணியிலும் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். 'ஆல் அபவுட் லவ்' (All About Love) என்ற அறக்கட்டளையை தனது நண்பர்கள் உடன் சேர்ந்து துவங்கி இருக்கும் பூஜா, அதன்மூலம் நலிந்த மக்களுக்கு உதவி வருகிறார். கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகளின்போதே மக்களுக்கு தேவையான உதவிகளை தனது குழு மூலம் வழங்கி வந்தார் பூஜா ஹெக்டே. கொரோனா பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் மருத்துவ செலவு, ரேஷன் பொருட்களை வாங்கி கொடுப்பது என பல்வேறு உதவிகளை வழங்கினார்.

இந்தநிலையில்தான் அறக்கட்டளை ஆரம்பித்து இருக்கிறார். தனது வருமானத்தின் ஒரு பகுதியை அறக்கட்டளைக்கு ஒதுக்க இருப்பதாகவும் அறிவித்து இருக்கிறார். இந்தப் பணிகள் பற்றி பூஜா ஹெக்டே அளித்த பேட்டி ஒன்றில், ``எனது அமைப்பு இப்போது சில காலமாக தான் உள்ளது. என்றாலும் கொரோனா தொற்றுநோய்க்கு முன்பே ஆரம்பித்துவிட்டோம். அறக்கட்டளை மூலம் சில பணிகளை செய்யும் வரை இது தொடர்பாக வெளியில் பேச வேண்டாம் என்று முடிவெடுத்தேன். அதன்படிதான் இத்தனை நாள் வெளியே சொல்லவில்லை.

மக்கள் எனக்கு அளிக்கும் பணத்தை எதாவது ஒரு வழியில் மக்களுக்கு திருப்பித் தர வேண்டும் என்று உணர்ந்தேன். அதன் விளைவுதான் இந்த அறக்கட்டளை பணிகள். அன்பு மற்றும் சேவையால் புதிய கலாசாரத்தை உருவாக்க விரும்புகிறேன். கொரோனா தொற்றுநோயின் எங்களது அனைத்து உதவிகளும் இந்த அமைப்பு மூலமாக தான் இருந்தது. எனது வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை சமூகத்திற்காக சில தொண்டுகளை செய்ய ஒதுக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.

இந்த அறக்கட்டளையை ஆரம்பித்தபோது `அன்பு' இந்த உலகின் எவ்வளவு பெரிய உணர்ச்சி மற்றும் சக்தி என்பதை உணரத் தொடங்கினேன். நாம் காட்டும் சிறிய வகையிலான அன்பு ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் வல்லமை படைத்தது. ஒரு சிறிய விஷயம் ஒருவரின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை" என்று நெகிழ்ந்து பேசியுள்ளார்.