சினிமா

‘படப்பிடிப்பில் எனக்கு ஆச்சர்யமளித்தது இது’ - பொன்னியின் செல்வன் வெற்றிவிழாவில் மணிரத்னம்

‘படப்பிடிப்பில் எனக்கு ஆச்சர்யமளித்தது இது’ - பொன்னியின் செல்வன் வெற்றிவிழாவில் மணிரத்னம்

webteam

‘பொன்னியின் செல்வன்’ படம் வெளியாகி வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சென்னை தாஜ் கோரமண்டலில் படக்குழுவினர் இன்று சந்தித்தனர். இந்நிகழ்வில் இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, பார்த்திபன், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பார்த்திபன் பேசியபோது, "குதிரைகள் நன்றாக ஓடும். ஒருவேளை இந்தப் படத்தை குதிரைகள் பார்த்தால், 'என்ன இந்தப் படம் நம்மை விட வேகமாய் ஓடுகிறது!' என ஆச்சர்யப்பட வாய்ப்பு உண்டு. என்னுடைய சந்தோஷம் என்ன என்றால் இப்படி ஒரு படத்தை நான் தவறவிடவில்லை என்பதுதான். 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கும் ஒரு படத்தில் நானும் ஒரு ஐந்து காட்சிகளில் வருகிறேன். இதைத்தான் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது என்பார்கள்" என்று தெரிவித்தார்.

நடிகர் ஜெயம்ரவி பேசுகையில், "இந்த அழகான படத்தை, மக்களிடம் கொண்டு சேர்த்ததில் ஊடகத்தின் பங்கு முக்கியமானது. இந்தத் தருணத்தில் உலகம் முழுக்க இருக்கும் அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்‌. பல வெளிநாட்டு ஊடகங்கள் இந்தப் படத்திற்கு சிறப்பான விமர்சனத்தை அளித்திருக்கிறார்கள். இப்படியான வெற்றிக்கு மணிரத்னம் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இருவரும் மிகத் தகுதியானவர்கள்" என்று தெரிவித்தார்.

நடிகர் கார்த்தி கூறும்போது, “உலகம் முழுக்க இருக்கும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. ரவி சொன்னதை நானும் காப்பி பேஸ்ட் செய்துகொள்ள விரும்புகிறேன். இந்தப் படத்துக்காக செய்த ப்ரமோஷன் பயணங்களும் மிகப் புது அனுபவமாக அமைந்தது" எனப் பேசினார்.

நிகழ்வில் பேசிய நடிகர் விக்ரம், "ரவி, கார்த்தி பேசியது உண்மை. அவர்கள் சொன்னதை நானும் உணர்ந்திருக்கிறேன். இந்தப் படம் பற்றி எவ்வளவு சொன்னாலும் பத்தாது. ரசிகர்களின் வரவேற்பு பெரியதாக இருந்ததில் சந்தோஷம். இந்தப் படத்திற்குத்தான் என்ன விமர்சனங்கள் வருகிறது எனப் பார்த்துக்கொண்டே இருந்தேன். இது படம் என்பதைவிட ஒரு உணர்ச்சி என்றுதான் சொல்வேன். படமாக பார்க்கும்போது தலைமுறைகள் கடந்தும் கவர்கிறது. படம் பார்த்த பின் பலரும் புத்தகத்தை படித்திருக்கிறார்கள்.

இதன் ஒவ்வொரு பாத்திரம் பற்றியும் எல்லேருக்கும் ஒரு கற்பனை இருந்திருக்கும். அதற்கு ஒரு முகம் இருந்திருக்கும். இந்தப் படத்தால் அந்த முகம் எங்களின் முகமாக மாறியிருக்கிறது. கதாபாத்திரங்கள் மேல் உள்ள அவர்களின் அன்பு எங்கள் மேலும் வந்திருக்கிறது. பெரிய இடைவேளைக்குப் பிறகு இந்தப் படத்தைப் பார்ப்பதற்காக திரையரங்கு சென்றவர்களுக்கு நன்றி" என்று தெரிவித்தார்.

இயக்குநர் மணிரத்னம் பேசும்போது, "கல்கி அவர்களுக்கு நன்றி. கல்கியின் இந்தக் கதையை படமாக்க வேண்டும் என்பது என் பேராசை. அதை நிறைவேற்றி விட்டேன். இதில் நடித்த ஒவ்வொரு கலைஞர்களுக்கும் நன்றி. படப்பிடிப்பின்போது ஒவ்வொரு நாளும் வெளியே வந்து பார்ப்பேன்; பலரும் வேலை செய்வார்கள். இத்தனை பேர் இந்தப் படத்துக்காக வேலை செய்கிறார்களா என ஆச்சர்யமாக இருக்கும். அவர்கள் நம் கண்ணுக்குத் தெரியமாட்டார்கள். ஆனால் அவர்கள் உழைப்பு மூலமாக படத்தை அழகாக்குவார்கள், அவர்கள் அனைவருக்கும் நன்றி" என்று குறிப்பிட்டார்.

அத்துடன் இயக்குநர் மணிரத்னம் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், கல்கி அறக்கட்டளைக்கு ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு சார்பாக நேற்று 1 கோடி ரூபாய் நிதி அளித்தது இந்த நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.