சினிமா

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் கல்கியின் ஆன்மா சாந்தியடையும் - நடிகர் ஜெயம் ரவி

webteam

மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரு பாகங்களாக உருவாகியுள்ளது. நாளை படத்தின் முதல் பாகம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று மதியம் சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, பார்த்திபன், விக்ரம் பிரபு, நடிகை த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, சோபிதா ஆகியோர் கலந்து கொண்டனர். நாளை படம் வெளியாவது பற்றியும், படத்திற்கான ப்ரமோஷன்களுக்காக சென்று வந்த பயணம் பற்றியும் இந் நிகழ்வில் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய ஜெயம் ரவி, "நாளை படம் ரிலீஸ் ஆகிற டென்ஷன் இருக்கிறது. ஆனால், எங்கள் உழைப்பை மக்கள் பார்க்கப் போகிறார்கள் என்ற சந்தோஷத்துடன் இருக்கிறோம். எல்லா ஊர்களுக்கும் சென்று வந்தது நல்ல அனுபவமாக இருந்தது. எல்லா நகரங்களிலும் அவர்களின் பாரம்பரியத்தோடு எங்களை வரவேற்றார்கள். இந்தப் படத்தின் மூலம் கல்கி அவர்களின் ஆன்மா சாந்தி அடையும். மேலும் மணி சார் கனவு, தமிழ் மக்களின் கனவு நாளை நனவாகப் போகிறது" என்று தெரிவித்தார்.

விக்ரம் பேசுகையில், "கிளாடியேட்டர், ப்ரேவ் ஹார்ட் போன்ற ஹிஸ்டாரிக்கல் கதைக் களத்தில் நடிக்க வேண்டும் என்பது நெடுநாள் கனவு. நான் மிகவும் விரும்பிய ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிக்க நான் தேர்வானது மிக சந்தோஷமாக இருக்கிறது. எல்லோரின் நினைவிலும் உள்ள பாத்திரத்தில் நடிக்கிறோம் என்ற பயம் இருந்தது. ஆனால் மணி சாரும் அவரது குழுவும் அந்தப் பயத்தை எனக்கு உடைத்தார்கள். முன்பே ‘பிதாமகன்’ படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தேன். மேலும் சில படங்களில் இன்னொரு நட்சத்திரத்துடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி பல ஸ்டார்களுடன் இணைந்து நடித்ததில்லை. இதுவே மிகப் புதுமையான அனுபவமாக இருந்தது.

நாளை ‘விக்ரம் வேதா’ படமும் ரிலீஸ் ஆகிறது. புஷ்கர் காயத்ரி தமிழில் ஹிட்டான அவர்களுடைய படத்தை இந்திக்கும் கொண்டு சென்று சேர்த்திருக்கிறார்கள். அவர்களுக்கும் என் வாழ்த்துகள்" என்று தெரிவித்தார்.

நடிகர் விக்ரம் பிரபு பேசுகையில், “இந்தப் படத்தில் நடிக்க மணிரத்னம் என்னை அழைத்த நாளில் இருந்தே மகிழ்ச்சி. நான் வியந்து பார்த்த பலருடன் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். பொதுவாக ஒரு இயக்குநருக்கு அவரின் படம் ஒரு குழந்தைப் போல. அந்தக் குழந்தையை நாளை எல்லோரும் கொஞ்சப் போகிறார்கள். நாங்களும் ரசிகர்களைப் போல படத்தைப் பார்க்க காத்திருக்கிறோம்” என்று கூறினார்.