சினிமா

ப்ரின்ஸ், சர்தார் படங்களால் ‘பொன்னியின் செல்வன்’ வசூல் பாதிக்குமா? -இதுவரை செய்த சாதனைகள்!

சங்கீதா

60 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் உள்பட பல்வேறு திரைப் பிரபலங்களால், ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக எடுக்க முயன்று கைகூடாமல் போக, கடைசியில் வெற்றிக்கரமாக திரைப்படத்தை எடுத்து முடித்து, திரையரங்கில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இந்தப் படம் எடுப்பதற்கு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தநிலையில், திரைப்படமாக எடுக்கப்பட்டு கடந்த 30-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் பார்வையாளர்களிடையே 4-வது வாரமாகியும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை ஈட்டியதா?, ‘சர்தார்’, ‘பிரின்ஸ்’ ஆகியப் படங்கள் தீபாவளிக்கு வெளியாவதால் வசூல் பாதிக்குமா?, இதுவரை இந்தப் படம் செய்த சாதனை ஆகியவை குறித்து சிறு தொகுப்பாக இங்குக் காணலாம்.

வசூலில் சாதனை

1. இந்த ஆண்டு வெளியான இந்தியப் படங்களில், அதிக வசூலை ஈட்டியப் படங்களில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

   •‘கே.ஜி.எஃப். 2’ (ரூ. 1,228 கோடி),

   •‘ஆர்.ஆர்.ஆர்.’ (ரூ. 1,131 கோடி),

   •‘பொன்னியின் செல்வன்’ (ரூ. 463 கோடி 17 நாட்களில்),

   •‘விக்ரம்’ (ரூ. 446 கோடி)

   •பிரம்மாஸ்திரா (ரூ. 412 கோடி)

2. தென்னிந்திய அளவில் வசூலில் சாதித்தப் படங்களில் ‘பாகுபலி 2’, ‘கே.ஜி.எஃப். 2’, ‘ஆர்.ஆர்.ஆர்.’, ‘2.0’, ‘பாகுபலி 1’ ஆகியப் படங்களை தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 17 நாட்களில் 6-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

3. உலக அளவில் அதிக வசூலை ஈட்டிய தமிழ் படங்களில் ரஜினிகாந்தின் ‘2.0’ படத்தைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசனின் ‘விக்ரம்’, ‘கபாலி’, ‘எந்திரன்’, ‘பிகில்’ ஆகிய முறையே இடம் பிடித்துள்ளன.

4. தமிழ்நாடு திரையரங்கில் மட்டும் அதிக வசூலை ஈட்டியப் படங்களில் 212 கோடி ரூபாய் வசூலித்து ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து ‘விக்ரம்’ படம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

5. முதல் நாள் வசூலில் இந்தாண்டு வெளியான தமிழ் படங்களில் அஜித்தின் ‘வலிமை’ (ரூ. 36.17 கோடி) படமும், விஜய்யின் ‘பீஸ்ட்’ (ரூ.31.4 கோடி ) படமும் டாப்பில் உள்ளன. இதனைத் தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 25.86 கோடி ரூபாய் வசூலித்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

6. சென்னையில் அதிக வசூலித்தப் படங்களில் மட்டும் ‘பொன்னியின் செல்வன்’ மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

 • ரஜினியின் ‘2.0’ (ரூ. 24. 65 கோடி),

 •‘பாகுபலி 2’ (ரூ. 18. 85 கோடி),

 •‘பொன்னியின் செல்வன்’ (ரூ. 17. 80 கோடி) (19 நாட்களில்)

தீபாவளிப் படங்களால் வசூல் பாதிக்குமா?

தீபாவளியை முன்னிட்டு கார்த்தியின் ‘சர்தார்’ படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும், அதேபோல் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்தை மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் நாளை வெளியிடுகிறது. இந்தப் படங்களுக்கான முன்பதிவுகள் மந்தமாக இருந்தாலும், இந்த இரு படங்களுக்கான திரையரங்கு மற்றும் ஸ்கிரீன்கள் அதிகளவில் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் வருகிற நாட்களில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வசூல் பாதிக்கும் என்றே கூறலாம்.

இந்த இருப் படங்களில் ஒன்று நன்றாக இருந்தாலும், இல்லை இரண்டும் படங்களுமே நன்றாக இருந்தாலும் அந்தப் படங்களுக்குத் தான் திரையரங்குகள் முன்னுரிமை அளிக்கும். ‘பொன்னியின் செல்வன்’ வெளியாகும் தேதிக்கு ஒருநாள் முன்னதாக தனுஷின் ‘நானே வருவேன்’ படம் வெளியாகி, அதனால் திரையரங்கு குறைக்கப்பட்டு சிறிதளவு வசூல் பாதித்ததை அனைவரும் அறிந்ததே. ரஜினியின் ‘2.0’ படத்தின் வசூலை முறியடிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது வரை இந்தப் படம் 463 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் வயதானவர்கள் முதல் சிறுவர்கள் வரை இந்தப் படத்தை விரும்பியதால் அவ்வாறு கூறப்பட்டநிலையில், தற்போது இன்னும் சில வாரங்கள் ஓடினால் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.