சினிமா

ஓடிடியில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ - ஆனாலும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்... என்னென்ன?

சங்கீதா

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. எனினும் அதனைப் பார்க்க வேண்டுமென்றால் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் தற்போதும் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையிலும், படம் வெளியாகி ஒரு மாதத்தை நிறைவு செய்ய உள்ளதால், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஹெச்டி தரத்தில் இன்று வெளியாகியுள்ளது. எனினும் தற்போது சந்தாதாரர்கள் அனைவரும் பார்க்க முடியாது. தற்போது படம் பார்க்க வேண்டுமென்றால் அமேசான் பிரைம் ஓடிடியில் அதன் சந்தாதாரர்கள் உள்பட அனைவரும் ரூ. 199 கட்டணம் செலுத்தித்தான் பார்க்கமுடியும்.

ரூ. 199 செலுத்திய தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும். மேலும் படம் பார்க்க ஆரம்பித்த 48 மணி நேரத்துத்துக்குள் படத்தைப் பார்த்து முடித்துவிட வேண்டும். படத்தைப் பதிவிறக்கம் செய்ய முடியாது. மேலும் அடுத்த 7 நாள்களில் அமேசான் பிரைம் ஓடிடியில் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நவம்பர் 4-ம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் படம் வெளியாகவுள்ளது. அப்போது அமேசான் பிரைம் சந்தாதாரர்களால் கூடுதல் கட்டணம்
எதுவும் செலுத்தாமல் ‘பொன்னியின் செல்வன்’ படத்தைப் பார்க்க முடியும். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் 30-ம் தேதி வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம், 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.