சினிமா

பாகுபலியால் தான் பொன்னியின் செல்வன் சாத்தியமானது- இயக்குநர் மணிரத்னம்

PT

ராஜமவுலியின் பாகுபலியால் தான் பொன்னியின் செல்வன் சாத்தியமானதாக இயக்குநர் மணிரத்னம் ராஜமவுலிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

வரலாற்று புனைவு கதையான ”கல்கி” யின் பொன்னியின் செல்வன் கதை திரைப்படமாக இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு முதல் பாகம் செப்டம்பர் மாதம் இறுதியில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளெல்லாம் முடிக்கப்பட்டு, படத்திற்கான பாடல்களை ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட்டு வருகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாடலானா “பொன்னி நதி பாக்கனுமே” பாடல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு இரண்டாவது பாடலான “ சோழா சோழா” பாடலை படக்குழு வெளியிட்டது.

அப்போது இரண்டாவது பாடல் வெளியீட்டில் பேசிய இயக்குநர் மணிரத்னம், தான் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் பாகுபலி பட இயக்குநர் ராஜமவுலி இருவருக்கும் நன்றி சொல்ல விரும்புவதாக தெரிவித்தார். சிரஞ்சீவிக்கு செலுத்திய நன்றி குறித்து பேச மறுத்தவர் ராஜமவுலிக்கு எதற்காக நன்றி தெரிவித்தேன் என்பதை பற்றி பேசினார்.

ராஜமவுலி குறித்து பேசிய அவர், “ஒருவகையில், நம் அனைவருக்கும் ஒரு கதவைத் திறந்து வைத்திருக்கிறார், இந்த மாதிரியான படத்தை எடுக்க முடியும் என்பதை எங்களுக்குக் காட்டியுள்ளார். இரண்டு பகுதிகளாக கதைகளை சொல்லி வெற்றி பெறலாம் என்று நிரூபித்து இருக்கிறார். பாகுபலியால் தான் பொன்னியின் செல்வன் சாத்தியமானது” எனவே தான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் என்றார்.