சினிமா

ஆரம்பமே அதகளம் செய்யும் தென்னிந்திய சினிமா - 4 படங்களால் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல்!

சங்கீதா

கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் பாலிவுட்டை தாண்டி, தென்னிந்தியப் படங்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. வித்தியாசமான கதைக்களத்திலும் சரி, பாக்ஸ் ஆபீஸ் வசூலிலும் சரி தென்னிந்தியப் படங்கள் தான் உயர்வை சந்தித்து வருகின்றன. அதே வழக்கமான மசாலா கதை, நெப்போட்டிசம் உள்பட பலக் காரணங்களால் பாலிவுட் படங்கள் சரிவை சந்தித்து வருகின்றன. குறிப்பாக கடந்த ஆண்டில் வெளியான தென்னிந்தியப் படங்களான ‘கே.ஜி.எஃப்.2’, ‘ஆர்.ஆர்.ஆர்.’, ‘காந்தாரா’, ‘பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ உள்ளிட்டப் படங்கள் எல்லாம் மாஸ் வசூலைப் பெற்றன.

மேலும் ‘777 சார்லி’, ‘லவ் டுடே’, ‘சீதா ராமம்’, ‘சர்தார்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘டான்’ உள்ளிட்டப் படங்களும் குறைந்தப் பட்ஜெட்டில் உருவாகி 100 கோடி ரூபாய் வசூலை தொட்டன. ஆனால், இந்தி சினிமாவைப் பொறுத்தவரை சோதனையான காலம் என்றே கூறவேண்டும். அமீர்கான், அக்ஷய் குமார், ரன்வீர் சிங் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் கூட படுதோல்வியை சந்தித்தன. இந்தநிலையில், 2023-ம் ஆண்டு துவங்கிய முதல் மாதத்திலேயே தென்னிந்திய சினிமா, 4 படங்கள் மூலம் மட்டுமே 600 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது குறித்துப் பார்க்கலாம்.

1. வாரிசு

தில் ராஜூவின் ஸ்ரீவெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா இணைந்து தயாரித்திருந்தப் படம் ‘வாரிசு’. ‘மகரிஷி’ படத்திற்குப் பிறகு வம்சி பைடிபள்ளி இயக்கியிருந்த இந்தப் படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்தார். எதிர்மறை விமர்சனங்களுக்கு இடையே, கடந்த 11-ம் தேதி வெளியான இந்தப் படம் 7 நாட்களில் 213.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 2023-ம் ஆண்டில் 200 கோடி ரூபாய் கிளப்பை துவக்கி வைத்துள்ள இந்தப் படம், இதனுடன் வெளியானப் படங்களில் அதிக வசூல்செய்து முதலிடத்தில் உள்ளது.

2. துணிவு

ஜீ ஸ்டூடியோஸ், போனி கபூர் இணைந்து தயாரித்திருந்த திரைப்படம் ‘துணிவு’. ‘வலிமை’ படத்திற்குப் பிறகு எச் வினோத் இயக்கியிருந்த இந்தப் படத்தில், அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் உள்ளிட்டப் பலர் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைத்திருந்தார். நேர்மறை விமர்சனகளுக்கு இடையே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘துணிவு’ திரைப்படம் ரூ. 151.8 கோடி வசூலித்துள்ளது.

3. வால்டர் வீரய்யா



மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், பாபி கொல்லி இயக்கியிருந்த படம் ‘வால்டர் வீரய்யா’. இந்தப் படத்தில் சிரஞ்சீவி, ரவி தேஜா, ஸ்ருதிஹாசன், கேத்ரீன் தெரசா உள்ளிட்டப் பலர் நடித்திருந்தனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். பொங்கலை முன்னிட்டு, கடந்த 13-ம் தேதி வெளியான இந்தப் படம் 5 நாட்களிலேயே ரூ. 144.2 கோடி வசூலித்துள்ளது. சிரஞ்சீவியின் கம்பேக் என்றும் சொல்லும் வகையில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், தெலுங்கைத் தாண்டியும் இந்தப் படமும் வசூலை குவித்து வருகிறது.

4. வீர சிம்ஹா ரெட்டி

கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில், நந்தாமூரி பாலகிருஷ்ணா, ஸ்ருதிஹாசன், வரலஷ்மி சரத்குமார், ஹனி ரோஸ், துனியா விஜய் உள்ளிட்டப் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. தமன் இசையமைத்திருந்தார். கடந்த 12-ம் தேதி வெளியான இந்தப் படம் 6 நாட்களில் ரூ. 109.45 கோடி வசூலித்துள்ளது.

இந்த 4 படங்களுமே பொங்கல் விடுமுறையை ஒட்டி வெளியாகி மொத்தமாக 600 கோடி ரூபாய் வசூலைப் பெற்ற நிலையில், அடுத்துவரும் நாட்களும் அதிக வசூலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், இந்தியில் இந்தாண்டு இதுவரை பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை. நாளை மறுதினம் சித்தார்த் மல்ஹோத்ரா, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘மிஷன் மஞ்சு’, வரும் 25-ம் தேதி ஷாருக்கான், தீபிகா படுகோனின் ‘பதான்’ உள்ளிட்டப் படங்கள் வெளியாக உள்ளது. இந்தப் படங்களில் வசூலைப் பொறுத்துதான் பாலிவுட் மீண்டு எழுந்ததா, இல்லையா என்பது தெரியவரும்.