deva deva
சினிமா

தேவா உயிரிழப்பு| ”இசைக்கு மரணமில்லை..” முதல்வர் விஜய், EPS, கமல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்!

இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா மாரடைப்பால் தன்னுடைய 76வது வயதில் காலமானார்.

Rishan Vengai

தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா மாரடைப்பால் காலமானார். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த அவர், கானா பாடல்களால் மக்களின் மனங்களை கவர்ந்தார். அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமா ரசிகர்களால் தேனிசைத் தென்றல் என கொண்டாடப்படும் இசையமைப்பாளர் தேவா, சென்னையில் இன்று காலை மாரடைப்பால் காலமானார், அவருக்கு வயது 76. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களுக்கு பாடல்கள், பின்னணி இசையை வழங்கியிருக்கும் தேவா, அண்ணாமலை, பாட்ஷா, ஆசை, நேருக்கு நேர் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தேவா

இந்நிலையில் இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் விஜய்

தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல்'தேவா மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார்.

கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற தேவாவின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.

தேவாவை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்

தமிழ்த் திரையுலகின் இசை ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த ‘தேனிசைத் தென்றல்’ இசையமைப்பாளர் தேவா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையையும் பேரதிர்ச்சியையும் அளிக்கிறது.

தனித்துவமான இசையாலும், இனிமையான மெட்டுகளாலும், மக்கள் மனங்களில் என்றும் ஒலித்துக்கொண்டிருக்கும் எண்ணற்ற பாடல்களாலும் தமிழ் இசை உலகில் அழியாத தடம் பதித்தவர்

தேவாவை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலகினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர்

தொண்ணூறுகளின் தலைமுறையைத் தனது துள்ளலான கானா பாடல்களாலும், நெஞ்சை உருக்கும் மெல்லிசையாலும் கட்டிப்போட்ட மாபெரும் இசைக் கலைஞர்.

சாமானிய மனிதர்களின் உணர்வுகளைத் திரையிசையாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு.

அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கும் இசையுலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி

அன்புச் சகோதரர் தேவா மறைந்துவிட்டார் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

உற்சாகமும் துறுதுறுப்பும் சிறு நகைச்சுவைக்கும் பெரிதாகச் சிரிக்கும் இயல்பும் கொண்டு வளையவந்தவர். அவ்வை சண்முகி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் படங்களில் நாங்கள் இணைந்து வேலை செய்த காலங்களின் கலகலப்பு நினைவில் எழுகிறது.

அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கும் என் ஆறுதல்களும் இரங்கல்களும்.

பிரேமலதா விஜயகாந்த்

தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவு – ஈடு செய்ய முடியாத பேரிழப்பு!

இசையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்ற மாபெரும் இசைக்கலைஞர், தேனிசைத் தென்றல் திரு. தேவா அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

தமிழ்த் திரையுலகின் இசை வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றவர் தேவா அவர்கள். தனது இனிமையான மெட்டுக்களாலும், மண்ணின் மணம் மாறாத நாட்டுப்புற இசையாலும், காலத்தால் அழியாத பாடல்களாலும் தலைமுறைகள் கடந்து மக்களின் இதயங்களில் நீங்காத இடம்பிடித்த மகத்தான இசை மேதை.

எனது அன்புக் கணவர், புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கும் இடையே நிலவிய நட்பும் அன்பும் மிகவும் ஆழமானவை. திரையுலகில் இருவரும் இணைந்து பணியாற்றிய பல திரைப்படங்களின் பாடல்கள் இன்றளவும் மக்களின் மனங்களில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, “வாராரு வாராரு அழகர் வாராரு” என்ற பாடல், ஆண்டுகள் பல கடந்தும் தமிழர்கள் வாழும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஒலித்துக்கொண்டிருப்பது, தேவா அவர்களின் இசைக்கு காலத்தால் அழிவில்லை என்பதற்குச் சிறந்த சான்றாகும்.

கேப்டன் அவர்களின் திரைப் பயணத்தில் அவரது வீரத்தையும், மக்கள் மீதான அன்பையும், உணர்வுகளையும் இசையின் வழியாக மக்களிடம் கொண்டு சேர்த்ததில் தேவா அவர்களின் பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது.

இசையுலகில் புகழின் உச்சத்தைத் தொட்டபோதும் எளிமையையும் பண்பையும் மனிதநேயத்தையும் கடைப்பிடித்தவர். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு மட்டுமின்றி, இந்திய இசையுலகிற்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

கேப்டன் அவர்களுடன் இணைந்து பல மறக்க முடியாத இசை நினைவுகளை உருவாக்கிய தேவா அவர்கள், இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும், அவருடைய இசை என்றென்றும் நம்முடன் வாழும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா அவர்களுக்கும், உறவினர்களுக்கும், திரையுலகினருக்கும், உலகெங்கும் உள்ள அவரது இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இசைக்கு மரணமில்லை!

தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் புகழுக்கு என்றும் அழிவில்லை!

எடப்பாடி பழனிசாமி

பிரபல இசையமைப்பாளர் அன்புச் சகோதரர் “தேனிசைத் தென்றல்” தேவா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

எளிய பின்னணியில் இருந்து வந்து, எளிய மக்களின் வாழ்வியலை தன் இசையால் பிரதிபலித்தவர் தேவா அவர்கள். Mass, Melody, Devotion என அனைத்து வகையான பாடல்களிலும் தனி முத்திரை பதித்தவர்.

தேவா அவர்களின் “கானா” பாடல்களுக்கு துள்ளாத கால்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரின் உள்ளங்களிலும் நிறைந்திருக்கிறது அவருடைய இசை.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் மீது பெரும் மதிப்பும், நம் அதிமுக கழகத்தின் மீது பேரன்பும் கொண்ட சகோதரர் தேவா அவர்கள், நம் கழகத்திற்காக மெட்டமைத்த பிரச்சாரப் பாடல்கள் என்றைக்கும் கழகத் தொண்டர்களின் இதயங்களில் தனித்த இடம் பெற்றவை.

மாண்புமிகு அம்மா அவர்களுக்கும் சரி, நான் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னும் சரி, தேவா அவர்கள் நமக்காக பாடிய பிரச்சாரப் பாடல்களே கழகத்தின் குரலாக பட்டிதொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், நம் இயக்கத்தின் அறைகூவல் குரலாக அன்புச் சகோதரர் தேவா அவர்களின் காந்தக் குரல் திகழும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

“தேனிசைத் தென்றல்” தேவா அவர்கள் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறை மற்றும் இசைத் துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.