இரண்டு முன்னணி நடிகர்களின் படம் ஒரே நாளில் வெளியானால் வசூலில் அது என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பேட்ட, விஸ்வாசம் படங்கள் எடுத்துக் காட்டியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினி காந்த். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை இன்றளவும் அவர் தக்க வைத்துக் கொண்டுள்ளார். தொடக்கத்தில் கமல் உடன் ரஜினி படங்கள் போட்டி போட்டு வெளியாகும். அப்போது இருவருக்கும் சம அளவில் ரசிகர்கள் இருந்தார்கள். அதனால், அவர்களே ஒரே நாளில் படத்தை வெளியிட வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தனர். பின்னர், கமலுக்கான மவுசு குறைந்தாலும், ரஜினிக்கான ரசிகர்கள் ஏதோ ஒருவகையில் இருந்து கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு படம் வெளியாகும் தருணங்களிலும் அதனை பார்க்க முடிகிறது.
ரஜினி கமலுக்கு தமிழ் சினிமாவில் அஜித், விஜய் முன்னணி நாயகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இருவரது படங்களும் வெளியாகும் நாட்களில் அவர்களது ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள். ஒரே நாளில் படம் வெளியாவை இருவரும் தவிர்த்து வந்தாலும், கடைசியாக வீரம், ஜில்லா படம் ஒரே நாளில் வெளியானது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினி நடித்த பேட்ட மற்றும் அஜித் நடிப்பில் உருவான விஸ்வாசம் படங்கள் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. முதல் நாளில் இருவரது ரசிகர்களும் படத்தை உற்சாகத்துடன் வரவேற்று கொண்டாடினர். தமிழகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது.
தற்போதைய நிலவரப்படி ரஜினியை காட்டிலும் இளம் தலைமுறை ரசிகர்கள் அஜித்திற்கே அதிகம். இருப்பினும், இரண்டு உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியாவதால் கடும் போட்டி நிலவும் என்று பேசப்பட்டது. வசூலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், எதிர்பார்க்கப்பட்டதுபோல், ரஜினி, அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியானதால் வசூலில் சற்றே சறுக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை விஸ்வாசத்தை காட்டிலும் பேட்ட அதிக வசூல் செய்துள்ளது. பேட்ட ரூ1.12 கோடியும், விஸ்வாசம் ரூ88 லட்சமும் வசூல் செய்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு நிலவரத்தைப் பொருத்தவரை விஸ்வாசம் தான் அதிக வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஸ்வாசம் ரூ26.7 கோடியும், பேட்ட ரூ22 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஒட்டுமொத்த இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பேட்ட படம் தான் அதிக வசூல் ஈட்டியுள்ளது.
முதல் நாள் வசூலைப் பொருத்தவரை அஜித்தின் முந்தைய படமான விவேகம் சென்னையில் ரூ1.21 கோடி வசூல் ஈட்டியுள்ளது. ரஜினியின் காலா ரூ1.78 கோடி வருமானம் ஈட்டியது. முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில் இருவரது படங்களில் வசூலும் சற்றே குறைந்துள்ளது. விஸ்வாசம் படம் நள்ளிரவு ஒரு மணி காட்சி தமிழகத்தின் பல இடங்களில் திரையிடப்பட்டது. ஆனால், பேட்ட திரைப்படம் காலை 4 மணி காட்சி கூட பெரிய அளவில் திரையிடப்படவில்லை. இதுவும் வசூலின் வித்தியாசங்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுமுதல் நாள் வசூல் நிலவரம் தான். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் 6 நாட்கள் விடுமுறை வரவுள்ளது. அதனால், வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலான வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.